ஆப்கான் விவகாரம்.. இவ்வளவு பிரச்சனைக்கும் டிரம்ப் அன்னைக்கு போட்ட அந்த ‘ஒப்பந்தம்’ தான் காரணம்.. பரபரப்பை கிளப்பிய பைடன்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கான் விவகாரத்துக்கு டொனால்ட் டிரம்ப் செய்த ஒப்பந்தமே காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானுக்கும், தாலிபான்களுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. இதில் ஆப்கான் அரசு ஆதரவாக அமெரிக்கா தாலிபான்களுடன் சண்டையிட்டு வந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். உடனே ஆப்கானின் முக்கிய நகரங்களை தாலிபான்கள் வேகமாக கைப்பற்ற ஆரம்பித்தனர்.
இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானை மொத்தமாக தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். அப்போது காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ் கோரோசான் அமைப்பு நடத்திய தாக்குதலில் 100-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. மேலும் அதிபர் ஜோ பைடன் எடுத்த முடிவு குறித்து பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்நாட்டு மக்களுக்கு ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது, ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவை சரியென தான் மனதார நம்புவதாகவும், அமெரிக்க மக்களின் நலன் காக்கவே இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினார்.
இதனை அடுத்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். அதில், டிரம்ப் அதிபராக இருந்தபோது தாலிபான்களுடன் போட்ட தவறான ஒப்பந்தமே தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணம் என தெரிவித்தார். மேலும் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5000 தாலிபான்களை விடுவிக்க டிரம்ப் ஒப்புக்கொண்டதன் விளைவாகதான் அவர்கள் வேகமாக எழுச்சி பெற காரணமாக அமைந்ததாகவும் அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்