பாதிப்பு 'அதிகரிக்கும்' வேளையிலும் நிகழ்ந்த ஒரு 'நன்மை'... மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள 'தகவல்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பானில் தற்கொலைகள் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஜப்பானில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் ஒருபுறம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரை தற்கொலைகள் 20% குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஜப்பானில் கொரோனா பாதிப்பால் மன அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலைகள் குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருவது, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது போன்ற காரணங்களால் தற்கொலைகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அங்கு கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான பிரச்சனைகளால் தற்கொலைகள் அதிகரித்து வந்ததாகவும், தற்போது பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளதால் மாணவர்களிடையே மன அழுத்தங்கள் குறைந்துள்ளது எனவும், கொரோனா பாதிப்பால் உலகமே கடும் நெருக்கடியை சந்தித்து வருவதால் மக்கள் தற்கொலை குறித்து சிந்திப்பது இல்லை எனவும் இதுதொடர்பான ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனாவால் பல்வேறு சிக்கல்களும், நெருக்கடிகளும் ஏற்பட்டு வரும் வேளையில் இதுபோன்ற சில நன்மைகளும் நடந்து வருவது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் இதுவரை 16,000க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 700க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.