வெள்ளம் வந்தாலும் இனி கவலையில்ல.. 15 அடி உயரத்திலும் மிதக்கும் வீடுகளை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்வெள்ளம் வந்தாலும் அதில் இருந்து தப்பிக்கும் வகையில் வீடுகளை உருவாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது ஜப்பான்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், வட பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ளது. நிலநடுக்கங்கள், பேய் மழை, காட்டாற்று வெள்ளம் என இயற்கை சீற்றங்களால் ஜப்பான் அடிக்கடி பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இத்தகைய தாக்கங்களில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் அந்நாடு பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், வெள்ளத்திலும் மிதக்கும் வீடுகளை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது ஜப்பான்.
மிதக்கும் வீடு
ஜப்பானிய வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான ‘இச்சிஜோ கோமுடென்’ (Ichijo Komuten), மிதக்கும் வீட்டை உருவாக்கியுள்ளது. இந்த வீட்டிற்குள் நீர் புகாத வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு சாதாரண வீடு போல தோன்றும் இந்த வீடு, வெள்ளம் வந்த பிறகு அதில் மிதக்க துவங்கி விடும் என்கிறார்கள் ஜப்பானிய வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள். கடினமான இரும்பு கம்பிகளால் இந்த வீடு தரையுடன் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இந்த வீட்டை சுற்றி தண்ணீர் நிரம்பத் துவங்கியதும், இந்த வீடு மிதக்க ஆரம்பிக்கும். தரையில் இருந்து மேலேம்பும் இந்த வீடுகள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்படாமல் இருக்க, தடிமனான கேபிள்களால் இவை தரையுடன் பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் வெள்ளம் ஏற்படும்போது, வீடானது மேலே எழும்பும். பின்னர் வெள்ளம் வடிந்த பிறகு, மீண்டும் தரைக்கு வரும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி 5 மீட்டர் (15 அடி) வரையிலும் இந்த வீடு மேலேம்பும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சமின்றி வாழலாம்
இதன்மூலம், வெள்ளம் வரும் காலங்களில் மக்கள் அச்சமின்றி வசிக்க முடியும் என தெரிவித்திருக்கிறார்கள் ஜப்பானிய வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள். இந்நிலையில், இந்த வீட்டினை தண்ணீர் பரப்பில் சோதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பினால் தங்களால் வெள்ளத்தின் போதும் நிம்மதியாக வசிக்க முடியும் என்றும் இது தங்களை மகிழ்ச்சியடைய செய்திருப்பதாகவும் ஜப்பானி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்