இது வெறும் டீசர்.. மெயின் பிக்சர் இனிமே தான்.. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த அரிய புகைப்படம்..நாசா வெளியிட்ட அசரவைக்கும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பெரும் பொருட்செலவில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த பேரண்டத்தின் துல்லியமான புகைப்படம் நேற்று நாசாவால் வெளியிடப்பட்டது. இது உலகம் முழுவதும் பலராலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
பிரம்மாண்ட செலவு
மனித குலம் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும், பிரபஞ்சம் உருவானது எப்படி? என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் தெளிவான விடை கிடைத்தபாடில்லை. இந்த மர்மத்தை அவிழ்க்க, அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா உருவாக்கியதுதான் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இதனை உருவாக்கும் பணிக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 79 ஆயிரம் கோடி ரூபாய்) வாரி இறைத்தது அமெரிக்கா.
கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி மனித குல வரலாற்றின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 6.2 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் இயங்கக்கூடியது.
புகைப்படம்
இந்நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பேரண்டத்தை மிகத்துல்லியமாக படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதனை நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு காண்பித்தது நாசா. இதுவரை எடுக்கப்பட்ட பேரண்டங்களின் புகைப்படங்களிலேயே இதுதான் மிகவும் துல்லியமானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் படமானது SMACS 0723 என்ற நட்சத்திர கூட்டத்தின் (Cluster) படம்.
இந்த நட்சத்திர கூட்டம் பூமியில் இருந்து 4.8 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது. ஆனால், இது வெறும் துவக்கம் தான் எனவும் 13 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களை எதிர்காலத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் எடுத்து அனுப்ப இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
என்ன இருக்கு அதுல?
பொதுவாக சூரியனில் இருந்து ஒளி நம்மை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகும். ஆக, 8 நிமிடத்திற்கு முன்பு இருந்த சூரியனை தான் நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல, பேரண்டம் உருவானதாக சொல்லப்படும் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான பிரபஞ்சத்தை ஜேம்ஸ் வெப் படம் பிடிக்க இருக்கிறது. இதன் மூலம் பிரபஞ்சம் தோன்றிய ஆரம்ப காலத்தை நாம் துல்லியமாக அறிய முடியும். இன்று புரியாத புதிராக இருக்கும் பல கேள்விகளுக்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சில ஆண்டுகளில் விடை அளிக்க இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
இதனிடையே தற்போது ஜேம்ஸ் வெப் எடுத்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Also Read | லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு இடையே தகனம் செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல்..!
மற்ற செய்திகள்