"இப்படி ஒன்ன நாங்க பார்த்ததேயில்லை".. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பிய வியாழனின் புகைப்படம்.. திகைச்சுப்போன ஆராய்ச்சியாளர்கள்.!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வியாழன் கோளினை எடுத்திருக்கும் புகைப்படம் ஆராய்ச்சியாளர்களையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
ஜேம்ஸ் வெப்
பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் உருவானதாக பொதுவாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது. இருப்பினும் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு நம்மால் இன்னும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த பல வருட மர்மத்தை வெளிக்கொண்டுவரவே ஜேம்ஸ் வெப் எனப்படும் தொலைநோக்கியை 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் கோடி) செலவில் உருவாக்கியது நாசா.
கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி மனித குல வரலாற்றின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 6.2 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் இயங்கக்கூடியது. இது, முன்னர் நாசாவால் அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி போல 100 மடங்கு சக்திவாய்ந்தது.
வியாழன்
இந்நிலையில், சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனை கடந்த ஜூலையில் படம் பிடித்திருக்கிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. அகச்சிவப்பு கதிர்கள் மூலமாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் வண்ணங்களை இட்டு பல்வேறு பகுதிகளை வேறுபடுத்திக்காட்டியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில், வியாழனின் வட மற்றும் தென் துருவத்தில் ஏற்படும் ஒளிகள், வியாழனின் துணைக்கோள்கள் ஆகியவை பிரகாசமாக தெரிகின்றன.
அதேபோல, வியாழனின் ரெட் ஸ்பாட் எனப்படும் மிகப்பெரிய புயல் வீசும் பகுதியும் இந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. இந்த பகுதியில் பல ஆண்டுகளாக புயல் வீசிக்கொண்டிருப்பதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், இதன் அளவு பூமியை விட பெரியது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
புகைப்படம்
இதுபற்றி பேசிய பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் இம்கே டி பேட்டர்,"வியாழனை இப்படி நாம் பார்த்ததில்லை. நம்ப முடியாத வகையில் இந்த புகைப்படம் அமைந்திருக்கிறது. உண்மையை சொன்னால் இந்த இப்புகைப்படங்கள் இத்தனை அருமையானதாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை" என்றார். தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியில் இருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | "கடைசிவரை போராடி பார்த்தோம்".. கடலில் மூழ்கிய பிரம்மாண்ட சொகுசு கப்பல்.. உலக அளவில் வைரலாகும் வீடியோ..!
மற்ற செய்திகள்