காம்ரேடாக அவதாரம் எடுக்கும் ஜாக்கி சான்!.. அரசியல் கராத்தேவிலும் அதிரடி காட்டுவாரா?.. ஏன் இந்த திடீர் முடிவு?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகப் புகழ் பெற்ற திரை நட்சத்திரமான ஜாக்கி சான் தனது இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகி வருகிறார்.
ஜாக்கி சான் என்றாலே உலக அளவில் சண்டைப் பட பிரியர்களுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்படும். ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கிச் சான் அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதன் மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் காலடி வைத்து ரஷ் ஹவர், கராத்தே கிட் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
ஜாக்கி சான், நடிகர், தற்காப்புக் கலை நிபுணராக மட்டுமின்றி, தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்றும் பல முத்திரைகளை பதித்தவர்.
தற்காப்பு கலையை சினிமாவில் பயன்படுத்தி அதன் மூலம் மக்களை கவர்ந்த ஜாக்கி சான், தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கியவர். எழுத்தாளராகவும், இயக்குநராகவும் பல திரைப்படங்களை ஹாங்காங்கில் எடுத்துள்ளார். இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த, அங்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைபடுத்தியது. இதை எதிர்த்து, ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக நடிகர் ஜாக்கி சான் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். சீன திரைப்பட சங்கத்தின் துணை தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான், பீஜிங்கில் நேற்று நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "கடந்த சில ஆண்டுகளில் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதை பல நாடுகளுக்கு செல்லும்போது நேரடியாக நான் உணர்ந்து உள்ளேன். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். ஐந்து நட்சத்திரங்களை உடைய நமது சிவப்பு கொடிக்கு, உலகம் முழுதும் மரியாதை கிடைக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது. எனவே, அக்கட்சியில் உறுப்பினராக சேர ஆர்வமாக உள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்