உலகின் முதல் கொரோனா ‘தடுப்பூசி’.. பிரிட்டனில் முதல் ஆளாக போட்டுக்கொண்ட ‘இந்தியர்’..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் இன்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை சுமார் 67 லட்சம் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 43 லட்சம் குணமடைந்துள்ளனர், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிர ஈடுபட்டு வருகின்றன.
அதில் ஃபைசர் (Pfizer) நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு கொடுக்க பிரிட்டன் அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து பிரிட்டனில் இன்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக சுகாதாரத்துறை முன் களப் பணியாளர்கள், முதியோர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. மொத்தம் 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் முதல் கொரோனா தடுப்பூசியை பிரிட்டனில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த ஹரி சுக்லா (87) என்பவருக்கு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த அவர், ‘எனக்கு தொலைபேசியில் கொரோனா தடுப்பூசி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் உற்சாகமாக இருந்தது.
இந்த தொற்றுநோயின் முடிவை நோக்கி நாம் வந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு தடுப்பூசி போடப்பட்டது சந்தோஷமாக இருக்கிறது. இதை என் கடமை என்று நான் உணர்கிறேன். இது என்னால் முடிந்த உதவி’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்