"கடைசி இந்திய மாணவர் இங்கிருந்து வெளியேர்ற வர உக்ரைன்ல தான் இருப்பேன்" நெகிழ வைத்த இந்திய டாக்டர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிக மோசமான தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது உக்ரைன். போர் தொடுப்பதாக ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததில் இருந்து உக்ரைனில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு ஆப்பரேஷன் கங்கா என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து கடைசி இந்திய மாணவர் வெளியேறும் வரையில் உக்ரைனை விட்டு வெளியேற மாட்டேன் என தெரிவித்து இருக்கிறார் இந்திய டாக்டர் ஒருவர்.
கொல்கத்தாவை சேர்ந்த டாக்டர் பிரித்வி ராஜ் கோஸ் (வயது 37). இவர் உக்ரைன் தலைநகர் கீவில் வசித்து வருகிறார். போர் துவங்கியதில் இருந்து அங்கே சிக்கி உள்ள இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டிவரும் கோஸ்," போர் முடிந்தாலும், இப்போதைக்கு இந்தியா வரப்போவதில்லை" எனத் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய கோஸ்," நான் கீவ் நகரில் சிக்கியுள்ளேன். வாய்ப்பு கிடைத்தாலும் இந்தியா செல்ல விருப்பம் இல்லை. இதுவரையில் கீவ் நகரில் இருந்த 350 மாணவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இவர்கள் அனைவரும் எனது மாணவர்கள். மேலும் சில ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது மாணவர்களுக்கும் உதவும்படி கூறியுள்ளனர். குறிப்பாக சுமி நகரில் தவிக்கும் மாணவர்களை மீட்க வேண்டியுள்ளது" என்றார்.
எனது கடமை
தன்னை நினைத்து பெற்றோர் கவலை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட கோஸ், உக்ரைனில் சிக்கி இருக்கும் மாணவர்களை மீட்ட பிறகே தான் வீட்டிற்கு செல்வேன் என உறுதிபட கூறுகிறார். இதுபற்றி பேசுகையில்," என்னை நினைத்து எனது பெற்றோர் கவலையடைந்து உள்ளனர். ஆனால் எனது பொறுப்பை நான் தானே செய்ய வேண்டும்? மாணவர்களை பத்திரமாக இந்தியா அனுப்புவதாக அவர்களின் பெற்றோர்களிடம் உறுதி அளித்துள்ளேன். இதை முடித்துவிட்டு இந்தியா திரும்புவேன்'' என்றார்.
உக்ரைனில் 10 வது நாளாக இன்றும் போர் தீவிரமடைந்தது. பொதுமக்களின் நலன்கருதி வோல்னோவாகா, மரியூபோல் நகரங்களில் போர் தற்காலிகமா நிறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். உக்ரைன் நாடே கலவர பூமியாக காட்சியளிக்கும் நிலையில், இந்திய மாணவர்களை மீட்ட பிறகே நாடு திரும்புவேன் என இந்திய மருத்துவர் கூறி இருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மற்ற செய்திகள்