"எல்லார்கிட்டயும் Help கேட்ருக்கோம்.. இந்தியா மட்டும் தான் எங்களுக்கு உதவுது".. இலங்கை அமைச்சர் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சிரமான சூழ்நிலையில் இந்தியா மட்டுமே தங்களுக்கு தொடர்ந்து உதவி வருவதாக இலங்கை அமைச்சர் உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார்
வெடித்த போராட்டம்
கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்த இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தடையை மீறி நுழைந்தனர். மேலும், மாளிகையில் இருக்கும் அறைகள் மற்றும் நீச்சல் குளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
தப்பிய அதிபர்
இதனிடையே பதவி விலகுவதாக அறிவித்திருந்த கோத்தபய, திடீரென தனது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலத்தீவுகளுக்கு தப்பிச் சென்றார். இதனால் பொறுப்பு அதிபராக ரணில் விக்ரமசிங்கே-வை நியமித்திருந்தார் கோத்தபய. மேலும், நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்வதாகவும், மேற்கு பிராந்தியங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாகவும் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார் ரணில்.
இந்நிலையில், மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றிருக்கிறார் கோத்தபய. அங்கிருந்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்து, இலங்கை சபாநாயகருக்கு அவர் கடிதம் ஒன்றை ஈமெயில் செய்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் வரும் 20 ஆம் தேதி இலங்கையின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்திருக்கிறார்.
இந்தியா உதவி
இலங்கையில் பொருளாதார நெருக்கடி துவங்கிய காலத்தில் இருந்தே இந்தியா பல்வேறு உதவிகளை செய்துவந்தது. எரிபொருள், மருத்துவ உபரணங்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள் என இந்தியா இலங்கைக்கு அனுப்பியது. மேலும், இலங்கையில் அமைய உள்ள புதிய அரசுக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவியாக வழங்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் உதவி குறித்து பேசிய இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிபொருள் அமைச்சர் கஞ்சனா விஜிசேகரா,"பல்வேறு நாடுகளிடம் எரிபொருள் தேவைக்காக நாங்கள் கோரிக்கை வைத்தோம். யார் உதவினாலும் எங்களுக்கு நல்லதே. ஆனால் இந்தியா மட்டுமே இதுவரை எங்களுக்கு கடன் வழங்கி உதவி வருகிறது. ரஷ்ய அரசுடன் இது தொடர்பாக சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவை கைகொடுக்கும் என நம்புகிறோம்" என்றார்.
வரும் 20 ஆம் தேதி, இலங்கையில் புதிய அதிபர் தெர்ந்தெடுக்கப்படுவதை முன்னிட்டு, அந்நாடே பரபரப்புடன் காணப்படுகிறது.
மற்ற செய்திகள்