‘இது என்னடா புது சோதனை’!.. ‘ஐஸ்கிரீம்’ கம்பெனிக்கு சீல்.. மறுபடியும் பரபரப்பை கிளப்பிய சீனா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘இது என்னடா புது சோதனை’!.. ‘ஐஸ்கிரீம்’ கம்பெனிக்கு சீல்.. மறுபடியும் பரபரப்பை கிளப்பிய சீனா..!

வடக்கு சீனாவில் டியன்ஜின் டகியஓடஓ உணவு நிறுவனம் (Tianjin Daqiaodao Food Company) செயல்பட்டு வருகிறது. இங்கு நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து பால் பவுடர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமின் மாதிரிகள் மாநகராட்சியின் நோய்க்கட்டுப்பாட்டு மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உடனடியாக அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4,836 ஐஸ்கிரீம் பெட்டிகள் தயாரிக்கப்பட்ட நிலையில், 2,089 பெட்டிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் விற்பனை சந்தைக்கு 2,747 ஐஸ்கிரீம் பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 65 பெட்டிகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிலிருந்த ஐஸ்கிரீம்கள் சந்தைகளில் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இவை எங்கெல்லாம் விற்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த 1,662 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 700 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. எஞ்சியவர்களின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. ஊழியர்கள் மூலம் ஐஸ்கிரீமில் கோவிட்-19 தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் நியூசிலாந்து மற்றும் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் ஐஸ்கிரீம்களை சாப்பிட்ட மக்கள், தங்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக Sky News ஊடகத்தில் பேசிய வைராலஜி நிபுணர் டாக்டர் ஸ்டீபன் கிரிஃபின் (Dr Stephen Griffin), ‘ஐஸ்கிரீமில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் யாரும் அச்சப்பட வேண்டாம். இது மனிதர்கள் மூலம் தான் பரவியிருக்கக் கூடும். இது தொழிற்சாலைகளில் தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை அளித்துள்ளது. ஐஸ்கிரீம்கள் மிகவும் குளிர்ந்த வெப்பநிலையில் சேகரித்து வைக்கப்படுவதாலும், அதில் கொழுப்புச் சத்து நிறைந்திருப்பதாலும் வைரஸ் அதில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க காரணமாக அமைந்திருக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்