'திடீரென' மாறிய காற்றின் திசையால்... தீயணைப்பு வீரர்கள் உட்பட '19 பேருக்கு' நேர்ந்த 'பயங்கரம்'... கொரோனாவிலிருந்து 'மீள்வதற்குள்' நிகழ்ந்த சோகம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் காட்டுத்தீயில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

'திடீரென' மாறிய காற்றின் திசையால்... தீயணைப்பு வீரர்கள் உட்பட '19 பேருக்கு' நேர்ந்த 'பயங்கரம்'... கொரோனாவிலிருந்து 'மீள்வதற்குள்' நிகழ்ந்த சோகம்...

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த நாடும் முடக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அங்கு நோய் பரவல் குறைந்துள்ளதால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து சீன மக்கள் மீள்வதற்குள் அங்கு காட்டுத்தீயில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தின் லியாங்சன் பிராந்தியத்தில் உள்ள பண்ணை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்துள்ளது. பலத்த காற்றின் காரணமாக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கும் தீ வேகமாக பரவ, பல ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சுமார் 2 ஆயிரம் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென காற்றின் திசை மாறியதால் தீயணைப்பு வீரர்கள் இருந்த பகுதிக்கு காட்டுத்தீ பரவ, வீரக்கள்  பலரும் தீயில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

தீயில் சிக்கியவர்களை மீட்க சக வீரர்கள் தீவிரமாக முயற்சித்தும், 18 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு கைடு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இதே லியாங்சன் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 30 தீயணைப்பு வீரர்கள் பலியானது இங்கு குறிப்பிடத்தக்கது.

FIREACCIDENT, CORONAVIRUS, CHINA, FOREST, XICHANG