'ஆன்லைனில் தாய்ப்பால் கேட்ட அம்மா...' 'கொரோனாவால பால் கொடுக்க முடியல...' தாய்மார்களின் கருணை உள்ளம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஹாங்காங்கில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இரு குழந்தைகளை உடைய தாய், தன் குழந்தைகளுக்கு உணவளிக்க பால் தானம் செய்யுமாறு ஆன்லைனில் கேட்டவுடன் ஒரு வாரத்திற்கு தேவையான தாய்ப்பாலை அளித்துள்ளனர் அந்நாட்டு தாய்மார்கள்.
ஹாங்காங்கில் வசிக்கும் கேத்தரின் கோசாசி என்னும் பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோசாசி தனது கணவர் மற்றும் நான்கு மாத குழந்தை மற்றும் 21 மாத குழந்தைகளிடமிருந்து விலகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தன் குழந்தைகளுக்கு தாய் பால் அளிக்க முடியாமல் தவித்த கேத்தரின் கோசாசி இணையத்தில் செயல்பட்டு வரும் ஹாங்காங் தாய்ப்பாலின் நிறுவனர் ஜெம்மா மேக்ஃபார்லேனை தொடர்பு கொண்டு, தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தன் இரு குழந்தைகளுக்கும் தாய் பால் அளிக்க முடியவில்லை எனவும், அவரது இளைய மகனுக்கு ஏற்கனவே தாய் பால் ஒவ்வாமை இருப்பதாக கூறி உதவி கேட்டுள்ளார்.
இதையடுத்து துரித நடவடிக்கை எடுத்த மேக்ஃபார்லேன் ஆன்லைனில் தாய்ப்பால் நன்கொடைகளுக்கான ஒரு SOS அழைப்பை வெளியிட்டார். சில மணி நேரங்களுக்குள், ஏராளமான தாய்மார்கள் தங்களால் இயன்றதை வழங்குவதாக கூறி இருந்தனர். இதையடுத்து சராசரியாக இரு வாரங்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான சுமார் 15 லிட்டர் தாய் பால் கோசாசியின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் பலரை மனம் நெகிழ வைத்துள்ளது. மேலும் இது பற்றி கூறிய கோசாசி , "நான் கண்ணீருடன் இருந்தேன், இன்னும் பல அம்மாக்கள் என் குழந்தைக்கு பால் பம்ப் செய்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.