'இன்னும் சில மணி நேரங்கள் தான்!'.. 'அந்த வரலாற்று நிகழ்வுக்காக ஆயத்தமாகும் பிரிட்டன்!'.. ஒட்டு மொத்த உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் 'பிரெக்சிட் ஒப்பந்தம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்முழுமையாக பிரக்சிட் நிறைவேறுவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் பிரிட்டன் முழுவதும் அதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
நாளை அதாவது டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லாத ஒரு நாடாக, பிரிட்டன் முழுதாக மாறியிருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973ஆம் ஆண்டு பிரிட்டன் இணைந்தது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் தற்போது வெளியேறுவதுதான் பிரக்சிட் என்று அழைக்கப்படுகிறது.
டேவிட் கேமரான் பிரிட்டன் பிரதமராக இருக்கும்போது 2016 ஆம் வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவாக 51.9 சதவீத மக்கள் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து தெரசா மே பிரதமரானார். தொடர்ந்து 4 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் மற்றும் இரண்டு பொதுத் தேர்தல் கடந்து இந்த விவகாரம் சென்றது.
2020 ஆம் வருடம் ஜனவரி 31ஆம் தேதி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது. எனினும் வர்த்தக ஒப்பந்தங்கள், மாற்றக்கால அறிவிப்பு, உள்ளிட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட டிசம்பர் 31-ஆம் தேதி மாற்ற காலம் முடிவடையும் போது பிரிட்டன் முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து விடும் என்று கூறப்பட்டு இருந்தது.
அந்த மாற்றம் நாளை இரவு 11 மணிக்கு முடிவடையும் நிலையில் அந்த ஒப்பந்தம் மீண்டும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகிறது. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடம் கொடுக்காமல் இதற்கு ஆதரவு அளிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த ஒப்பந்தத்தஒ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் பிரச்சனை இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலானோர் அழைக்கப்பட்டு இந்த ஒப்பந்தத்தை அலசி ஆராயவிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் விண்ட்செர் மாளிகையில் தயாராக இருக்கும் பிரிட்டிஷ் மகாராணியார் இன்று நள்ளிரவு முதல் அந்த ஒப்பந்தத்திற்கு முறைப்படி ராஜீய ரீதியாக ஒப்புதல் அளிப்பார் என்று தெரிகிறது. நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பு நடைபெறும் அதே நேரம் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று தெரிகிறது.
ஏற்கனவே 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் தூதர்களும் மனமொத்து தங்களது ஆதரவை இந்த ஒப்பந்தத்திற்கு தெரிவித்துள்ளார்கள். உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக தங்களுடைய ஒப்புதலை தெரிவித்து இருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல். எனவே பிரிட்டன் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிவிருக்கிறது.
மற்ற செய்திகள்