‘அவுங்கள உடனே சரி பண்ணனும்’... ‘இப்படியே விடக் கூடாது... ‘கொந்தளித்த அதிபர் ட்ரம்ப்’
முகப்பு > செய்திகள் > உலகம்உலக சுகாதார அமைப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி சீரமைப்பு செய்யவேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வீடியோ கான்ஃபரன்சிங்கில் கூறியுள்ளார்.
கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உலகமே தவித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 நாடுகளின் தலைவர்கள் நேற்று வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கொரோனா குறித்து விவாதித்தனர். அப்போது உலக சுகாதார அமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதில் சீனாவுக்கு ஆதரவாகவே பேசி வரும் உலக சுகாதார அமைப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி சீரமைப்பு செய்யவேண்டும் என அமெரிக்கா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. உலக சுகாதார அமைப்பை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்ததற்கு, ஜி 7 நாடுகள் ஆதரவு தெரிவித்ததாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. முன்னதாக கொரோனா விஷயத்தில் உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டு வருவதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார்.
மேலும் சீனாவில் பரவும் கொரோனா குறித்த உண்மைகளை உலக சுகாதார அமைப்பு மறைப்பதாகக் கூறிய ட்ரம்ப், உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்து இருந்தார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கூறியிருந்தனர். இதேபோல், ஜப்பானும் உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் ட்ரம்ப் இவ்வாறு கூறியிருப்பது வல்லரசு நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.