வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை!.. 3 நாட்கள் லீவ்!!.. அமலுக்கு வந்தது புதிய நடைமுறை!.. அதிரடி காட்டும் நாடு!.. 'இது நமக்கும் செட் ஆகுமா'?
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்பிய நாடுகளில் முதல் நாடாக வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் நடைமுறையை ஸ்பெயின் அங்கீகரித்துள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தொழிலாளர்களின் மன நலனை பாதுக்காக்கும் வகையில் வாரத்தில் நான்கு நாட்கள், 8 மணி நேர வேலை முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என உலகளவில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
பல்வேறு நிறுவனங்களும் இந்த நடைமுறையை பரிசோதனை முறையில் மேற்கொண்டன. இந்நிலையில், வாரத்தில் 4 நாட்கள் 8 மணி நேர வேலை என்ற முறையை ஸ்பெயின் அரசு அங்கீகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இந்த முறையை அங்கீகரித்த முதல் நாடாகவும் ஸ்பெயின் உள்ளது.
இடதுசாரி அமைப்பு ஒன்று அரசின் கவனத்துக்கு இந்த முறையை எடுத்துச் சென்றது. இதுகுறித்து பேசிய மாஸ்பெய்ஸ் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஹெக்டர் டெஜரோ (Héctor Tejero), தங்களது புதிய திட்டத்தின்படி சுமார் 200 நிறுவனங்கள் இந்த நடைமுறையில் பங்கேற்க உள்ளதாக கூறினார். 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் 3 ஆண்டு திட்டத்தின் கீழ் வாரத்துக்கு 4 நாட்கள் மற்றும் 32 மணி நேர வேலையை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், இந்த திட்டத்துக்காக 50 மில்லியன் யூரோ ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊதியத்தை குறைக்காமல், வேலையின்மை என்ற நிலையையும் ஏற்படுத்தாமல், அதிக உற்பத்தியை கொடுக்க முடியும் என்றும் டெஜரோ நம்பிக்கை தெரிவித்தார். கார்டியன் கூற்றுப்படி, ஸ்பெயின் அரசு இந்த நடைமுறையை ஏற்கனவே பரிசோதனை முறையில் செய்துவந்ததாக கூறியுள்ளது. அதில், பணியாளர்களின் வேலை திறன் அதிகரித்ததாகவும், ஊழியர்களின் பணிச்சூழலும் ஆரோக்கியமாக இருந்ததையும் அறிய முடிந்ததாக தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் அரசின் இந்த புதிய அணுகுமுறையை கொரோனா காலத்தில் மற்ற நாடுகளும் சோதனை அடிப்படையில் பரிசோதனை செய்ததாக 'தி கார்டியன்' கூறியுள்ளது. கொரோனா காலத்தில் மிகப்பெரிய பொருளாதார சிக்கலும், வேலையின்மையும் அதிகரித்ததால் பலரின் வாழ்க்கை தலைகீழாக மாறியது.
எனவே, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வாரத்தில் 4 நாட்கள் வேலை என்பது முன்னோடி திட்டமாக இருக்கும் என ஸ்பெயின் கூறியுள்ளது. பணியிடத்தில் குறைவான நேரங்கள் மட்டுமே இருக்கும் ஊழியர்கள், ஊதிய குறைபாட்டை எதிர்கொள்ள மாட்டர்கள் என கூறியுள்ள ஸ்பெயின், இதனால் தொழிலாளர்களின் வேலைபார்க்கும் திறன் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஸ்பெயின் தொழில்துறை அமைச்சகம் புதிய நடைமுறை குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.
நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 4 நாட்கள் வேலை முறையில் எழும் சிக்கல் குறித்து தொடர்ந்து ஆராயப்படும் என்றும், வரும் நாட்களில் அந்த சிக்கல்களுக்கு தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த முடிவு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விரைவாக இந்த திட்டத்தை முழுவீச்சில் நடைமுறைப்படுத்த அந்நாட்டு திட்டமிட்டுள்ளது.
ஸ்பெயின் அளித்துள்ள வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற நடைமுறைக்கு ஆதரவாக 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து பிரதமர் ஏற்கனவே குரல் கொடுத்திருந்தார். மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இதனை ஏற்கனவே சோதனைமுறையில் பரிசோதனை செய்துள்ளன.
இந்தியாவிலும் இது போன்ற நடைமுறை வருமா? அப்படி வந்தால் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மற்ற செய்திகள்