'ஏன் நீ அதிபரை சுட்ட'?... 'உலகையே கதிகலங்க வைத்த அந்த பதில்'...'முன்னாள் அமெரிக்க அதிபர் மீதான துப்பாக்கி சூடு'... மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ள திருப்பம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே ஒரு நிமிடம் கதிகலங்க வைத்து விட்டது.
அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்டு ரீகன் மீது பாய்ந்த துப்பாக்கி தோட்டாக்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை யாராலுமே ஜீரணிக்க முடியவில்லை. கடந்த 1981 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று ஜான் ஹின்க்ளே என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். வாஷிங்டனில், ஹில்டன் ஹோட்டலின் வெளியே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.
இந்த கோரச் சம்பவத்தில் ரீகன், அவரது செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் ப்ராடி, காவல்துறை அதிகாரி ஆகியோர் படுகாயமடைந்தார்கள். துப்பாக்கிச் சூடு நடத்திய ஜான் ஹின்க்ளே கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் அளித்த பதில் தான் விசாரணை அதிகாரிகளை மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச் சூடு நடத்திய ஜான் தனது வாக்குமூலத்தில், ''நான் டாக்ஸி ட்ரைவர் படம் பார்த்தேன். அதில் நடித்துள்ள நடிகை ஜோடி ஃபாஸ்டரை எனக்கு நிறையப் பிடிக்கும். அவரை ஈர்ப்பதற்காக அவரின் அபிமானம் பெறவே இப்படி செய்தேன்'' என கூறி அதிரவைத்தார். இந்த காரணத்திற்காகவா அதிபர் மீது ஜான் ஹின்க்ளே துப்பாக்கிச் சூடு நடத்தினார் என போலீசார், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போனார்கள்.
அப்போது தான் ஜான் ஹின்க்ளேவை போலீசார் மனநல சோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் ஜானுக்கு தீவிர மனநல பாதிப்பு இருப்பது உறுதியானது. அதிலிருந்து 2016 வரை வாஷிங்கடன் மனநல மருத்துவமனையில் ஹின்க்ளே இருந்து வந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றாலும் கூட அவர் மீது படுகொலை முயற்சி வழக்கே பதிவு செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 2016ல் ஜான் தனது தாயாருடன் வாசிக்கலாம் என வில்லிம்ஸ்பர்க் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
அதேநேரத்தில் அவர் தற்போதைய, முன்னாள் அதிபர்கள், துணை அதிபர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது, போன்ற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஜான் ஹின்க்ளே வரும் 2022 ஜூன் மாதம் முதல் பூரணமாக விடுவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த சமயத்தில் ஜான் ஹின்க்ளேவுக்கு வயது 22. இப்போது அவருக்கு 66 வயதாகிறது.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக மனநல மருத்துவமனை, வீட்டில் தனிமை சிறை எனப் பல கட்டுப்பாடுகளுடன் கழிந்த ஜான் ஹின்க்ளேயின் வாழ்க்கை, இனி இருக்கப் போகும் காலத்திலாவது மன நிம்மதியுடன் வாழட்டும் என மனித நேய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள். அதேநேரத்தில் ஜான் ஹின்க்ளே போன்றோர் இப்போதும் கூட மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தானவர்கள் என்றும், அவருக்கு நிபந்தனையற்ற விடுதலை அளிக்கக் கூடாது என ரொனால்டு ரீகன் பவுண்டேஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்