'ச்சே, உங்களுக்கு மனசாட்சி இருக்கா'?... 'T Shirt-ல இப்படியா போடுவீங்க'... அமெரிக்க நிறுவனத்தை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கான் விவகாரத்தைக் கிண்டல் செய்யும் விதத்தில் அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ள T Shirt கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தனது படைகளை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார்கள். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து இருப்பதால் அங்கு நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.
உலக நாடுகள் முதற்கொண்டு தங்களின் தூதரங்களை மூடிவிட்டு, தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து அழைத்து வரும் பணியை முழு வீச்சில் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தாலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இனிமேல் இங்கு வாழ முடியாது என்ற காரணத்தினால் நாட்டை விட்டு வெளியேறும் முடிவில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற சூழ்நிலையில், காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்காவின் C17 இராணுவ விமானத்தின் சக்கரத்தில் பயணித்த ஆப்கானியர்கள், நடுவானில் விமானத்திலிருந்து கீழே விழுந்து பலியான வீடியோ இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் மனித குலத்திற்கு பெரும் அவமானம், இதற்காக நாம் வெட்கப் படவேண்டும் என உலக மக்கள் பலரும் கண்ணீர் வடித்தார்கள்.
இந்த சூழ்நிலையில் உலகத்தையே உலுக்கிய சம்பவத்தைக் கேலி செய்யும் விதமாக அமெரிக்கன் இ-காமர்ஸ் வலைத்தளமான Etsy-யில் ConaneShop என்ற நிறுவனம் டி-ஷர்ட்களை விற்பனை செய்து வருகிறது. ConaneShop என்ற நிறுவனம் தயாரித்து விற்கும் டி-ஷர்ட்டில், ‘காபூல் ஸ்கைடிவிங் கிளப், எஸ்டி. 2021’ என்ற வாசகத்துடன் விமானத்திலிருந்து இரண்டு பேர் கீழே விழும் காட்சி அச்சடிக்கப்பட்டுள்ளது.
இந்த டி-ஷர்ட்களின் படங்கள் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் இதற்கு எதிர்வினையாற்றி வருகிறார்கள் இது ஒரு மனிதத்தன்மையற்ற செயல் என்றும், ஒரு நாட்டு மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இப்படி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களைக் கிண்டல் செய்து இதுபோன்ற டி-ஷர்ட்களை வெளியிடுபவர்களுக்கு நிச்சயம் மனசாட்சி இருக்காது எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்கள்.
மற்ற செய்திகள்