நெறய குழந்தைகளை பெத்துக்கங்க..பணத்துக்காக கவலைப்படாதீங்க..ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் தனது ஊழியர்களை அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இந்த ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்திருந்த வேளையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அந்த நிறுவனத்தை முழுவதுமாக வாங்க முன்வந்தார் மஸ்க்.
9 குழந்தைகள்
கடந்த வாரம், மஸ்க்கிற்கும் அவரது நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்க ஆவணங்களை இந்த தம்பதி, சமர்ப்பிக்கப்போய் இந்த விபரம் வெளியே வந்திருப்பதாக தெரிகிறது.
இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன. எலாஸ் மஸ்க் தனது முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவின் பாடகர் கிரிமிஸ் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.
ஊழியர்களுக்கு அட்வைஸ்
இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ஸாக் என்பவர் மஸ்க்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதில்,"செலவினங்கள் காரணமாக அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள தொழிலாளர்கள் மறுப்பது குறித்து உங்களது பதில் என்ன?" என கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த மஸ்க்,"வாய்ப்புள்ளவர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். என்னுடைய நிறுவனத்தில் குழந்தைகள் நலத்திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க உள்ளேன். பிற நிறுவனங்களும் இதை செய்யும் என நம்புகிறேன். மஸ்க் அறக்கட்டளை மூலமாக குடும்பங்களுக்கு நேரடியாக உதவிகள் வழங்கப்படும். அடுத்த மாதம் இதுகுறித்த விரிவான அறிக்கை வெளியாகும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க் தனது ஊழியர்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மற்ற செய்திகள்