வெள்ளிக்கிழமை 5 மணி வரைதான் டைம் இருக்கு.. தீவிர முயற்சியில் எலான் மஸ்க்.. பரபர பின்னணி..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் இந்த வார இறுதிக்குள் ட்விட்டர் டீலை முடிக்கவேண்டி இருப்பதாகவும் அதற்கான முயற்சியில அவர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் அதிகமாக இருப்பதாகவும் இதுகுறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை என்றும் கூறிய மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிடுவதாக அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்னும் சில வாரங்களில் துவங்க இருந்தது.
இதனிடையே சமீபத்தில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், இதுதொடர்பாக கடிதம் ஒன்று ட்விட்டர் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை நிரூபிக்கும் வகையில், மஸ்க் தரப்பின் கடிதம் தங்களுக்கு கிடைத்ததாகவும், ஒரு பங்குக்கு $54.20 என்ற பரிவர்த்தனையை முடிப்பதே தங்களுடைய நோக்கம் எனவும் ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக, டெலாவர் நீதிமன்றம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க்கிற்கு அவகாசம் அளித்திருந்தது. அது வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைய இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ட்விட்டர் டீலை முடிக்க எலான் மஸ்க் தீவிர முயற்சியில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. மேலும், சக முதலீட்டு நிறுவனங்களின் உதவியுடன் மஸ்க் ட்விட்டர் டீலை முடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த விஷயம் உலக அளவில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்