"ட்விட்டர்ல எடிட் பட்டன் வேண்டுமா??.." எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. பாத்து பண்ணுங்க.. எச்சரித்த ட்விட்டர் 'CEO'..
முகப்பு > செய்திகள் > உலகம்உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க் (Elon Musk), ட்விட்டரில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியதும், அதற்கு ட்விட்டர் சி.இ.ஓ தெரிவித்த கருத்தும், நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன், ட்விட்டரில் ஒரு கருத்து கணிப்பினை எலான் மஸ்க் நடத்தி இருந்தார். அதில், "ஜனநாயகம் செயலாற்ற பேச்சு சுதந்திரம் தேவை. டுவிட்டர் இந்தக் கொள்கையை கடைப்பிடிக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?" என்றொரு கேள்வியை எழுப்பி இருந்தார்.
புதிய சமூக வலைத்தளம்?
இதற்கு பெரும்பாலானோர், இல்லை என்ற பதிலை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, எலான் மஸ்க் புதியதொரு சமூக வலைத்தளங்களை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகி வந்தது. இது பற்றி பேசிய எலான் மஸ்க்கும், அப்படி ஒரு முடிவு எடுக்கவுள்ளது பற்றி, தீவிரமாக பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்
இந்நிலையில், ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அவர் அளித்த தகவலின் படி, தற்போது அவரிடம் சுமார் 7 கோடியே 34 லட்சம் ட்விட்டர் பங்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராகவும் எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார்.
எடிட் பட்டன் வேண்டுமா?
இதனையடுத்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், முக்கியமான ஒரு கருத்து கணிப்பு குறித்து, கேள்வி எழுப்பி இருந்தார் எலான் மஸ்க். ட்விட்டரில், எடிட் பட்டன் ஆப்ஷன் வேண்டுமா என எலான் மஸ்க் கேட்க, தற்போது வரை சுமார் 70 சதவீதம் பேர், எடிட் பட்டன் வேண்டுமென வாக்களித்துள்ளனர்.
எச்சரித்த சி.இ.ஓ
தொடர்ந்து, மஸ்க்கின் கருத்துக்கணிப்பை பகிர்ந்த ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால், "இந்த கருத்துக்கணிப்புக்கு மிக கவனமாக வாக்களியுங்கள். இந்த ட்வீட் ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியமானவை" எனவும் ட்விட்டர்வாசிகளை எச்சரித்துள்ளார்.
ட்விட்டரில் எலான் மஸ்க் அதிக பங்குகளை வைத்திருக்கும் நபர் என்பதால், அவரின் கருத்து கணிப்பு மூலம் மாற்றங்கள் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ட்விட்டரில் எடிட் ஆப்ஷன்கள் வந்தால், நெட்டிசன்கள் யாரவது முதலில் ஒன்றை சொல்லி விட்டு, பிறகு அதனை தங்களின் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இருப்பதால், அதை பற்றியும் கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்