'தம்பி, நீங்க காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சது தப்பு இல்ல, ஆனா'... 'காதலிக்காக ரிஸ்க் எடுத்த இளைஞர்'... மொத்தமும் புஸ்வாணமான சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது அன்பிற்குரியவர்களைச் சந்தோஷப்படுத்தப் பலரும் சர்ப்ரைஸ் கொடுப்பது வழக்கம். ஆனால் அது நேர்மையான முறையில் இருக்க வேண்டும். அது தவறிப்போனால் இதுபோன்ற சூழ்நிலை தான் ஏற்படும் என்பதற்கு உதாரணமாக மாறியுள்ளது இந்த சம்பவம்.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 14-ந்தேதி சர்வதேச காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் காதலர்கள் பலர் தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகளை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினர். அந்த வகையில் துபாயில் வசித்து வரும் இளைஞர் ஒருவரின் காதலிக்குக் காதலர் தினம் அன்று பிறந்த நாள் வந்துள்ளது.
இதையடுத்து காதலிக்கு மறக்க முடியாத வித்தியாசமான பரிசு ஒன்றை அளிக்க அந்த இளைஞர் திட்டமிட்டுள்ளார். அதுவும் சர்ப்ரைஸாக கொடுக்க நினைத்துள்ளார். அப்போது அந்த பகுதியில் ஒட்டகங்கள் இருந்த பண்ணைக்குச் சென்று அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் ஒட்டக குட்டி ஒன்றை எடுத்து வந்து காதலிக்குக் காதலர் தின பரிசாகவும், பிறந்த நாள் பரிசாகவும் கொடுத்தார்.
இதைப் பார்த்த அந்த இளைஞரின் காதலி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். அதே நேரத்தில் இந்த ஒட்டக குட்டி எப்படி வந்தது, அதை வாங்க உனக்குப் பணம் ஏது என்ற எந்த கேள்வியையும் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் ஒட்டக பண்ணையின் உரிமையாளர் தனது பண்ணையில் ஒட்டகம் ஒன்றின் குட்டி பிறந்து சில மணி நேரங்களே காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
போலீசார் காணாமல் போன ஒட்டக குட்டியைத் தேடி வருவது உள்ளூர் செய்தி சேனல்களில் தலைப்பு செய்தியானது. இதைப் பார்த்த அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் தனக்குப் பரிசாக வந்த ஒட்டக குட்டி திருடப்பட்டது என்ற உண்மை அந்த இளைஞரின் காதலிக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் பயந்து போன அந்த வாலிபர் காதலியிடம் இருந்த ஒட்டக குட்டியை வாங்கி அதனைத் திருடிய பண்ணையின் வாசலின் முன்பு விட்டார்.
அதன் பின்னர் போலீசுக்கு போன் செய்து ஒட்டக குட்டி ஒன்று பண்ணையின் வெளியில் நிற்பதாகக் கூறினார். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் தகவல் தெரிவித்த வாலிபரிடம் விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினார். அந்த பண்ணைக்கும், அடுத்த பண்ணைக்கும் இடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
இந்த தூரத்தைக் கடந்து ஒட்டக குட்டி வர வாய்ப்பில்லை. எனவே சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் ஒட்டக குட்டியைத் திருடி தனது காதலிக்குக் காதலர் தின அன்பளிப்பாகவும், பிறந்த நாள் பரிசாகவும் வழங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும் இதற்காக இரவு நேரத்தில் அந்த பண்ணைக்குச் சென்று திருடியதாகக் கூறினார். இந்த திருட்டை மறைக்க பல்வேறு பொய்களைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் ஒட்டக குட்டியைத் திருடிய வாலிபரையும், திருடிய ஒட்டகத்தைப் பரிசாகப் பெற்ற காதலியையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். அப்போது உனது காதலிக்கு நீ சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தது தவறு இல்லை. ஆனால் அதை உனது சொந்த பணத்தில் கொடுத்திருக்க வேண்டும். ஒரு நொடி சந்தோசத்திற்கு ஆசைப்பட்டு தற்போது தண்டனை அனுபவிக்கப் போகிறீர்கள் என போலீசார் அந்த இளைஞரிடம் தெரிவித்தார்கள்.
மற்ற செய்திகள்