துபாயில் கட்டப்பட்ட பிரம்மாண்ட இந்து கோவில்.. திறந்துவைத்த அமீரக அமைச்சர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்துபாயில் கட்டப்பட்டுவந்த இந்துக்கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இது அங்கிருக்கும் இந்தியர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
கோவில்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கான இடத்தை 2019 ஆம் ஆண்டு அமீரக அரசு ஒதுக்கியது. இதனையடுத்து கொரோனா காலத்திலும் இந்த கோவில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. சுமார் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தை துபாயின் ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் திறந்து வைத்திருக்கிறார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் சுஞ்சய் சுதிர், துபாய் இந்து ஆலய அறங்காவலர் ராஜு ஷ்ராஃப் உள்ளிட்ட 200 பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், தசராவை முன்னிட்டு இன்று அதிகாலை இந்த கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. காலையில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த கோவிலின் உள்ளே சிவன், கிருஷ்ணா, கணபதி, முருகன், மகாலட்சுமி உள்ளிட்ட 16 கடவுள்களுக்கு தனி தனியாக தலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், உள்ளே பிரம்மாண்ட ஹால் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
நன்றி
இதுகுறித்து பேசிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் சுஞ்சய் சுதிர்,"துபாயில் புதிய இந்து கோவில் திறப்பு விழா நடைபெறுவது இந்திய சமூகத்திற்கு வரவேற்கத்தக்க செய்தியாக அமைந்திருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்து சமூகத்தினரின் வழிபாட்டு தேவைகளை இந்த ஆலயம் பூர்த்தி செய்யும். 2012 இல் திறக்கப்பட்ட குருத்வாராவை ஒட்டியே புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், கோவில் கட்டுமானத்தில் அமீரக அரசு செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்த சுதிர்,"துபாயில் புதிய இந்து கோவிலை ஷேக் நஹ்யான் திறந்து வைத்தது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. கோயிலுக்கு நிலம் வழங்கியதற்கும், அதைக் கட்டுவதற்கு வசதி செய்ததற்கும் உதவிய துபாய் அரசாங்கத்தின் கருணை மற்றும் பெருந்தன்மைக்கு நன்றி. அமீரகத்தில் 3.5 மில்லியன் இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்தியர்களுக்கான தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்வதுடன் இரண்டாவது தாயகமாகவும் அமீரகம் திகழ்கிறது" என்றார்.
இந்நிலையில், இந்த திருக்கோவில் பற்றி பேசிய துபாய் இந்து ஆலய அறங்காவலர் ராஜு ஷ்ராஃப், "துபாயில் கோயில் திறப்பு என்பது இந்துக்களுக்கு மட்டுமல்ல, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கு கனவு நனவாகும் தருணமாகும். மதத்தை நாம் எப்படி உணர்கிறோம் என்பதன் உண்மையான பிரதிநிதித்துவம் கோவில் தான். இதன்மூலம் கலாச்சாரங்கள் ஒன்றிணைகின்றன. கொரோனா காலத்திலும் கோவில் கட்டுமான பைகள் தொடர்ந்து நடைபெற உதவிய துபாய் அரசுக்கு நன்றி" என்றார்.
இந்த கோவிலுக்கு அருகிலேயே 9 கிறிஸ்தவ தேவாலயங்களும், குருத்வாராவும் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | "அது நெனச்சுப்பார்க்க முடியாத வலி".. பில்கேட்ஸ்-ன் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் உருக்கம்.. முழு விபரம்..!
மற்ற செய்திகள்