நிலநடுக்கத்தால் மரணமடைந்த குடும்பத்தினர்.. வாழ்ந்த வீட்டையே சுற்றி வரும் செல்ல நாய்..இதயத்தை நொறுங்க செய்யும் புகைப்படம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தான் வசித்த வீட்டையே சுற்றி சுற்றி வலம் வரும் நாயின் புகைப்படம் சமூக வலை தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
நிலநடுக்கம்
கடந்த புதன்கிழமை அதிகாலை ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் தரைமட்டமாகியிருக்கின்றன. இதனால் அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக குறைந்தபட்சம் 1000 பேர் மரணமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், காயமடைந்த ஏராளமான மக்களுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தரைமட்டமான வீடுகள்
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிமீ (27 மைல்) தொலைவில் 51 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பல கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. மேலும், வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.
நிர்கதியான நாய்
இந்த நிலநடுக்கம் காரணமாக, பல்வேறு மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்து தவித்துவருகின்றனர். அதேபோல, வீடுகளில் வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிகள் நிர்கதியாய் சாலைகளில் வலம் வருகின்றன. அந்த வகையில், இந்த நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள பக்திகா மாகாணத்தில் இறந்துபோன தனது வீட்டினரை தேடும் நாய் ஒன்றின் புகைப்படம் சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படத்தினை சமீரா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர்," பக்திகா மாகாணத்தில் ஒச்கி கிராமத்தில் இந்த நாய் வசித்துவந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நிலநடுக்கத்தால் மரணமடைந்துவிட்டனர். இந்நிலையில் இந்த நாயினை அருகில் வசிப்பவர்கள் தற்போது வளர்த்து வருகிறார்கள். இருப்பினும், தான் வாழ்ந்த வீட்டை அடிக்கடி வந்து இந்த நாய் பார்த்து செல்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த பாசமிகு நாயின் புகைப்படம் சமூக வலை தளங்களில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்