'உலகமே நம்ம மேல காண்டுல இருக்கு'... 'இதுல நீங்க வேற'...சீன இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வெளிநாடு சென்று வந்ததை மறைத்து, தனிமையில் இருக்காமல், கொரோனா சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்த இளைஞருக்கு சீன அரசு அதிரடி தண்டனையை வழங்கியுள்ளது.

'உலகமே நம்ம மேல காண்டுல இருக்கு'... 'இதுல நீங்க வேற'...சீன இளைஞருக்கு கிடைத்த அதிரடி தண்டனை!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு உலகம் முழுவதும் 58 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவுக்கு அந்நாட்டிலும் 3 ஆயிரத்து 322 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சீனாவில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அங்கு கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது நிலைமை சீரடைந்து வருவதையடுத்து அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் ஹேனன் மாகாணம் ஜெங்ஜோ நகரை சேர்ந்த ஜிய் என்ற இளைஞர், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் சீனாவிற்கு திரும்பிய பின்னர் தான் வெளிநாடு சென்று வந்த விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. கொரோனா அச்சுறுத்தலில் இருத்தலில் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்திய சுய தனிமைப்படுத்துதலையும் அவர் கடைபிடிக்கவில்லை. மாறாக வெளிநாட்டில் இருந்து திரும்பிய அடுத்த நாளே (மார்ச் 8) தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அலுவலகம் சென்ற அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிய அந்த பகுதியை சேர்ந்த காவல்துறையினர் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர் செல்போன் அழைப்பை ஏற்காமல் தனது தாயாரிடம் போனை கொடுத்துள்ளார். ஜிய்யின் தாயார் தனது மகன் வெளிநாடு திரும்பிய தகவல் மட்டுமல்லாமல் மகனுக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறிகள் குறித்த தகவலையும் காவல்துறையினரிடம் இருந்து மறைத்துள்ளார்.

இதற்கிடையே சில நாட்களிலியே  ஜிய்-க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 40 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனைத்தொடர்ந்து வெளிநாடு சென்று திரும்பிய தகவலை மறைத்தது, சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படாதது, கொரோனா அறிகுறிகள் இருந்த போது தானாக முன்வந்து சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காதது ஆகிய குற்றங்களுக்காக ஜிய் மீது வழக்கு தொடர்ப்பட்டது.

நீதிமன்ற விசாரணையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா பரவ சீனா தான் காரணம் என உலக நாடுகள் பலவும் குற்றம் சாட்டி வரும் நிலையில், சீனா இளைஞர் செய்துள்ள செயல் அங்குள்ள அதிகாரிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.