‘13 நாளா புதுசா யாருமே அட்மிட் ஆகல’.. வீட்டுக்கு திரும்பும் மருத்துவர்கள்.. சீனாவின் தற்போதைய நிலை என்ன..?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த ஹூபே மாகாணத்தில் ஒரு புதிய நோயாளிக்கூட அனுமதிக்கப்படவில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

‘13 நாளா புதுசா யாருமே அட்மிட் ஆகல’.. வீட்டுக்கு திரும்பும் மருத்துவர்கள்.. சீனாவின் தற்போதைய நிலை என்ன..?

சீனாவில் உள்ள ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுகானில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. தற்போது உலகம் முழுவதும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் 2,02,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,010 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,813 ஆகவும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் சீனாவில் மட்டும் 80,894 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3,237  உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளதாகவும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொரோனாவுக்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைகள் மூடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமாக கருதப்படும் ஹூபேயில் வைரஸ் தொற்றுள்ள ஒரு புதிய நோயாளி கூட அனுமதிக்கப்படவில்லை என அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணைய அதிகாரி மிஃபெக் (Mi Feng) தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த அவர், ‘கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட மாகாணம் ஹூபே. இங்கு உள்ள வுகான் நகரத்தில் கடந்த 13 நாட்களாக எந்த ஒரு புது நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நாட்களில் 896 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7,336 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2,077 பேர் கடுமையான நிலையிலும், 503 பேர் மிக கடுமையான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக ஹூபே மருத்துவமனையில் வேலை பார்த்த பணியாளர்கள் மெதுவாக வீடு திரும்பி வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

CHINA, COVID19