'நிச்சயமா இது கடவுளின் குழந்தை தான்'... மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட 'அதிசய நிகழ்வு'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்து மருத்துவர்களே ஆச்சரியப்பட்டு நிற்கிறார்கள்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பல மக்களை அச்சத்தில் உறையவைத்துள்ளது. இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 17,205 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் 21,558 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் உள்ள ஷூலாங்ஜீயங் மாகாணத்தின் ஹர்பின் நகரில் உள்ள மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகத்தின் பெயரில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தார்கள். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தார்கள். தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படுமோ என மருத்துவர்கள் அச்சமடைந்தார்கள்.
இதனால் அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்து, அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதில் அந்த பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என மருத்துவர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்தனர். அதில் அந்த பெண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இது மருத்துவர்களை ஆச்சரியப்படச் செய்தது. தாய்க்கு வைரஸ் பாதிப்பு இருந்தும் குழந்தைக்கு அந்த பாதிப்பு ஏற்படவில்லை என்பதை அறிந்த மருத்துவர்கள், சந்தோஷத்தில் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். மேலும் நிச்சயம் இது கடவுளின் குழந்தை எனப் பூரிப்பு அடைந்தார்கள்.