'இந்த தடுப்பூசியால'... '90 சதவிகிதம் பேருக்கு ஆன்டிபாடிகள் அதிகரிச்சிருக்கு'... 'இது மட்டும் வெற்றியடைஞ்சா'... 'வெளியாகியுள்ள குட் நியூஸ்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சினோவக் பயோடெக் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், ரஷ்யா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. இந்த தடுப்பூசி பரிசோதனையின் இறுதிகட்டமான 3வது கட்டத்தில் பல தடுப்பூசிகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் மொத்தம் 8 தடுப்பூசிகள் இறுதிகட்ட கட்ட பரிசோதனையில் உள்ளன. அதில் 4 தடுப்பூசிகள் சீனாவை சேர்ந்தவை ஆகும்.
இந்நிலையில், சீனாவின் சினோவக் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என உறுதியாகியுள்ளது. இந்த தடுப்பூசி பரிசோதனையில் சினோவக் பயோடெக் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் 3 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். 2 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ள இந்த தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர்கள் வயது அடிப்படையில் இளையோர், நடுத்தர வயதினர், முதியோர் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த இரண்டு கட்ட பரிசோதனையில் மொத்தம் எத்தனை ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற முழு விவரத்தை சீனா வெளியிடவில்லை.
இந்த 2 கட்ட பரிசோதனையிலும் சினோவக் தடுப்பூசி பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது. முதியோர் என குறிப்பிடப்பட்டுள்ள 60 வயதுக்கு மேலானவர்களுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது தெரியவந்துள்ளது. இந்த எதிர்ப்பு சக்தி இளையோர் மற்றும் நடுத்தர வயதினருடன் ஒப்பிடும்போது சற்று குறைவுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றத்தை தொடர்ந்து சினோவக் தடுப்பூசி தற்போது இறுதிகட்டமான 3ஆம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த இறுதிகட்ட பரிசோதனையும் வெற்றிபெறும் பட்சத்தில் உலக அளவில் இந்த தடுப்பூசியை விற்பனை செய்ய சினோவக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் 3ஆம் கட்ட பரிசோதனைகள் பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசால் அவசர பயன்பாட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே அனுமதி வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் சினோவக் தடுப்பூசியும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்