'எல்லோருக்கும் ஃபிரீ டெஸ்ட்'... 'அதெல்லாம் இல்ல'... 'சீனாவோட பயங்கரமான பிளான் இதுதான்'... 'அச்சத்தில் சந்தேகத்தை கிளப்பியுள்ள மக்கள்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஹாங்காங் மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. அதே நேரம் சீனாவில் பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில், அங்கு தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஹாங்காங்கிலும் பெருமளவு நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை அமல்படுத்தியுள்ள சீனா அங்கு தேசிய பாதுகாப்பு அலுவலகம் ஒன்றையும் திறந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமலேயே பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு முதல்முறையாக ஹாங்காங்கின் நிர்வாகத்தில் சீனா தலையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஹாங்காங்கில் உள்ள சுமார் 75 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சீனா நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. அதற்கென 60 பேர் கொண்ட சீனாவின் மருத்துவக்குழு ஹாங்காங்கிற்கு செப்டம்பர் 1ஆம் தேதி வர உள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது தினமும் 12 ஆயிரமாக உள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தினமும் 5 லட்சம் பரிசோதனை என உயர்த்தப்பட உள்ளது.
இந்த நடவடிக்கை ஹாங்காங்கின் நிர்வாக ரீதியில் தலையிடும், மக்களின் சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பரிசோதனையின் போது ஹாங்காங் மக்களின் டிஎன்ஏ மாதிரிகள் சீன அரசால் சேகரிக்கப்பட்டு அவை நபர்களை அடையாளம் காணவும், தனிப்பட்ட தகவல்களை தெரிந்துகொள்ளவும் பயன்படுத்தப்படலாம் எனவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஹாங்காங் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ள சூழலில் சீன தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
மற்ற செய்திகள்