சீனாவில் இருந்து அடுத்த அபாயம்!.. குரங்குகளை தாக்கும் விநோத வைரஸ்... மனிதருக்கு பரவியது!.. ஒருவர் உயிரிழப்பு!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியதால், அங்கு என்ன புதிய வகை தொற்றுகள் உருவாகினாலும் அது மற்ற நாட்டு மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கு முன்னதாக H10N3 பறவை காய்ச்சல் மனிதர்கள் யாருக்கும் உறுதி செய்யப்படாத நிலையில், ஜூன் 1ம் தேதி மனிதர் ஒருவரிடம் கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது குரங்குகளைத் தாக்கும் Monkey B என்ற வைரஸ் தொற்று மனிதர் ஒருவரை தாக்கியிருக்கும் செய்தி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அதிலும், அந்தத் தொற்றால் அவர் உயிரிழந்திருப்பது தான் ஆபத்தான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. விலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒரு நிறுவனத்தில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்து வந்த 53 வயது நிரம்பிய ஆணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு குமட்டல், வாந்தி ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாக தென்பட்டிருக்கின்றன. இதற்கிடையே, கால்நடை மருத்துவரான அவர், கடந்த மார்ச் மாதத்தில் இறந்துபோன இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்துள்ளார். இதிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு மேற்கண்ட அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றன.
அதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்கவில்லை. பின்னர், ஏராளமான மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை. இந்நிலையில், அவர் கடந்த மே 27ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மாதிரிகளை எடுத்து ஆராய்ச்சி செய்ததில், அவருக்கு 'மங்கி பி' (Monkey B) வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸால் மனிதர் ஒருவர் பாதிக்கப்படுவது உலகிலேயே இது தான் முதல் முறை.
மேலும், தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களைப் பரிசோதித்தபோது அவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்தது சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் மகாகா என்ற இனத்தைச் சேர்ந்த குரங்களில் 1932ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது நேரடி தொடர்பு மற்றும் உடலிலிருந்து வெளியேறும் கழிவுகள், சுரப்பிகள் மூலம் ஒரு குரங்கிலிருந்து இன்னொரு குரங்கிற்குப் பரவி வந்துள்ளது.
இதில் மிகவும் சிக்கலான விஷயம் என்னவெனில், இதனால் ஏற்படும் இறப்பு விகிதம் 70 - 80 சதவீதம் வரை உள்ளது. அதன் காரணமாகவே அந்த மருத்துவர் உயிரிழந்திருக்கிறார். மகாகா குரங்குகளுடன் அந்த மருத்துவர் இருந்ததாலும், அவரின் கவனக்குறைவாலும் இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்பதால், குரங்குகளைக் கையாளும் கால்நடை மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்