‘உங்க பேரை மாத்தி வைச்சுக்கோங்க’... ‘சீனா கொரோனா வைரஸ் விஷயத்தில்’... 'அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை அடுத்து'... 'விளாசித் தள்ளிய ஜப்பான்’!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஜப்பானும் சீனா கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்தை சாடியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகின் 200-க்கும் மேலான நாடுகளைப் புரட்டிப்போட்டு வருகிறது. இந்த வைரஸ் நோய்க்கு மருந்துகள் ஏதும் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் உலக நாடுகள் சவாலையும் சிக்கலையும் எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஜப்பான் நாட்டின் துணைப் பிரதமர் டாரோ அஸோ, உலக சுகாதார அமைப்பை கடுமையாக சாடியுள்ளார். அதில், உலக சுகாதார அமைப்பு (World Health Organization), தனது பெயரை சீனா சுகாதார அமைப்பு ( Chinese Health Organization) என மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஏனெனில் உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து போதுமான மதிப்பீடு முன்பே செய்யவில்லை எனக் கூறிய டாரோ அஸோ, கொரோனா தொற்றுநோய் பாதிப்பை முறையாக கையாளாத உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் பதவி விலக வேண்டும் எனவும் கூறினார். இதற்காக 5 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, உலக சுகாதார அமைப்பு அரசியல் ரீதியில் நடுநிலைமையுடன் செயல்படவில்லை என்றும், கொரோனா தொடர்பாக, WHO இயக்குநர் டெட்ராஸ் கண்மூடித்தனமாக நம்புகிறார் என ஜப்பான் துணை பிரதமர் டாரோ அஸோ குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக இதே கருத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பும், சீனாவின் கடலுணவு மார்கெட்டை உலக சுகாதார நிறுவனம் மூட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.