"சாக்லேட் சாப்டா போதும்.. 61 லட்சம் சம்பளம்.. வீட்ல இருந்துகூட வேலை பார்க்கலாம்".. நிறுவனம் வெளியிட்ட வித்தியாசமான அறிவிப்பு.. முழு விபரம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவை சேர்ந்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று வித்தியாசமான வேலைக்கான அழைப்பிதழை வெளியிட்டுள்ளது. இது சாக்லேட் பிரியர்களை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது.
சாக்லேட் பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி சிறுவயது குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரையில் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் புள்ளியாக அமைந்திருக்கிறது சாக்லேட். ஒரு ரூபாய் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கும் சாக்லேட்கள் உலகம் முழுவதும் விற்பனையாகி கொண்டுதான் இருக்கின்றன. சாக்லேட் பிரியர்கள் அதனை மறக்காமல் வாங்கி சுவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், சாக்லேட் சாப்பிட சம்பளம் கொடுக்கும் நிறுவனம் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இருக்கிறது. கனடாவில்.
கனடாவை சேர்ந்த Candy Funhouse என்னும் நிறுவனம் வேலைக்கான ஆஃபரை வெளியிட்டுள்ளது. அதாவது இந்நிறுவனத்தில் சாக்லேட் ருசி பார்க்கும் பணியான Chief candy officer பணிக்கு ஆள் தேவைப்படுவதாக இந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதற்கு அவர்கள் கொடுக்கும் ஊதியம் தான் பலரையும் திக்குமுக்காட செய்திருக்கிறது.
ஊதியம்
இந்த பணிக்கு 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தெர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 61 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேட்கவே தித்திப்பாக இருக்கிறது அல்லவா?
இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒரு மாதத்துக்கு 3500 சாக்லேட்களை ருசி பார்க்கவேண்டுமாம். குறிப்பாக வட அமெரிக்காவை சேர்ந்த 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவணம் தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்தே பணிபுரியலாம்
இந்த வேலைக்கு சேர்பவர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரியலாம் எனவும் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது பெற்றோரின் சம்மதத்துடன் இங்கே பணிபுரியலாம் எனவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில நிபந்தனைகளையும் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி விண்ணப்பதாரர்கள் நல்ல ருசி பார்க்கும் திறனுடன் இருக்கவேண்டும். மேலும், அவர்களுக்கு எந்தவிதமான ஒவ்வாமையும் இருத்தல் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாமல், இந்த வேலையில் சேர்ந்து பற்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு உரிய மருத்துவ கட்டணங்களையும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளுமாம். இதுகுறித்து பேசியுள்ள இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி,"உற்சாகத்துடன் இருப்பவர்களுக்கும் இயல்பாகவே தலைமை பண்பை கொண்டவர்களுக்கும் இந்த வேலை நல்ல வாய்ப்பாக அமையும். எங்களது நிறுவனத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடன் வேலை பார்க்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த வேலைக்காக ஆகஸ்டு 31 ஆம் தேதிவரையில் விண்ணப்பிக்கலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Hiring: CHIEF CANDY OFFICER! 🍭 Are you passionate about CANDY, POP CULTURE and FUN? Get paid 6 figures to lead our Candyologists. Job is open to ages 5+, you can even apply on behalf of your kid! #DreamJob #hiring #careers #candy pic.twitter.com/p9mmlPg5R6
— Candy Funhouse (@candyfunhouseca) July 19, 2022
மற்ற செய்திகள்