மறுபடியும் மொதல்ல இருந்தா?... தீவிர லாக்டவுன்-ஐ அமல்படுத்திய நாடு... அவசர அவசரமாக ஆலோசனை நடத்தும் இந்தியா!!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பரவிய வைரஸைவிட இதன் தொற்றும் தன்மை 70% அதிகம் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அந்நாட்டில் பெரும் அச்சம் எழுந்ததால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வைரஸ் தொற்று குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசரக் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது.
இதில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சர்வதேச சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதியவகை உருமாற்றம் பெற்ற வைரஸ் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்திருந்தாலும் குளிர்காலம் தீவிரமடையும் நிலையில் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்கிடையில், இங்கிலாந்தில் இருந்துவரும் மற்றும் அங்கு செல்லும் பயணிகளுக்கு பிற ஐரோப்பிய நாடுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இங்கிலாந்திற்கான விமான சேவையை இத்தாலி நிறுத்திவிட்டது.
இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடுப்பூசிக்கு ஒப்புதல் கொடுத்து அவற்றை மக்களுக்கு போடும் பணியை இம்மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் அங்கு தொற்று பதிவாகி வருகிறது. தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்