'கொரோனா ஒரு மனநோய்...' 'விளையாட்டுதான் வைரசுக்கு எதிரான சிறந்த மருந்து...' 'அதிபரின்' பேச்சால் 'அதிர்ந்து' போயிருக்கும் 'மக்கள்'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இதனை மனநோய் என்று வர்ணித்துள்ளார் பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுக்செங்கோ.
கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலக நாடுகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் உயிர்பலிகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், கொரோனாவை பற்றி எவ்வித அச்சமும் இன்றி, இரண்டாம் உலகப் போரின் 75 ஆவது வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது ஐரோப்பிய நாடான பெலாரஸ். தலைநகர் மின்ஸ்கில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அந்நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுக்சங்கோ, " கொரோனா வைரஸ் தொற்று என்று எதுவுமில்லை. கொரோனா வைரஸ் என்பது ஐரோப்பிய நாடுகளின் மனநோயே அன்றி வேறொன்றுமில்லை. இதற்காக ஊரடங்கை பிறப்பித்தால் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும்" என்று பேசியுள்ளார்.
முன்னதாக தலைநகர் மின்ஸ்கில் ஹாக்கி விளையாட்டு போட்டியை அவர் துவக்கி வைத்து பேசிய அவர், " நாட்டு மக்கள் அனைவரும் எப்போதும்போல் பணிபுரியுங்கள்; வயல்வெளிகளில் வேலை செய்யுங்கள்; ஐஸ் ஹாக்கி விளையாடுங்கள்; உடம்பை மசாஜ் செய்து கொள்ளுங்கள்; விளையாட்டுதான் வைரசுக்கு எதிரான சிறந்த மருந்து" எனக் கூறியிருந்தார்.
பெலராஸ் அதிபரின் இந்தப் பேச்சு அந்நாட்டு மக்களை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெலாரஸ் நாட்டில் இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் 126 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.