இதைவிட 'கொடிய' வைரஸ்கள் தாக்கலாம்... சீனாவின் 'வவ்வால்' பெண்மணி எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவை விட வருங்காலத்தில் கொடிய வைரஸ்கள் நம்மை தாக்கலாம் என சீனாவின் வவ்வால் பெண்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வேலையின்மை, உணவு பற்றாக்குறை, மருத்துவ வசதி இல்லாமை, பொருளாதார சரிவு போன்ற பல காரணங்களால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தவித்து வருகின்றனர். இன்னும் எந்தவொரு தடுப்பூசி மருந்துகளும் கண்டறியப்படவில்லை என்பதால் மொத்த உலகமும் கொரோனாவை நினைத்து கவலையில் ஆழ்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் நம்மை தாக்கலாம் என சீனாவின் வவ்வால் பெண்மணி என அறியப்படும் ஷி ஜெங்லி தெரிவித்து இருக்கிறார். முதன் முதலில் கொரோனா வைரஸ் மரபணுக்களை வரிசைப்படுத்தி, தீர்வையும் வெளியிட்டவர். சீனாவின் வவ்வால் குகைகளில் மறைந்திருக்கும் சார்ஸ் போன்ற கொடிய வைரஸ்களை அடையாளம் கண்டவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஷீ. கொரோனா குறித்த தகவல்களை வெளியிடக்கூடாது என சீன அரசு அவரை மிரட்டி பணிய வைத்து இருந்ததால் உரிய காலத்தில் கொரோனா குறித்த தகவல்களை உலகம் அறிந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஷீ கூறுகையில், ''தற்போது உலக நாடுகளை கடுமையாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ் என்பது வெறும் ஒரு பனிப்பாறையின் முனை மட்டுமே. இன்னும் சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும். இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து எதிர்காலத்தில் தப்பித்துக் கொள்ள உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். அறிவியல், அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவது உண்மையில் மிகவும் வருந்தத்தக்கது.
வைரஸ்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு அரசாங்கங்களும் விஞ்ஞானிகளும் தங்கள் கண்டுபிடிப்புகளுடன் வெளிப்படையாக இருக்க வேண்டும். இயற்கையில் காட்டு விலங்குகளால் பரப்பப்படும் இந்த அறியப்படாத வைரஸ்களைப் பற்றி அறிந்து முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்க வேண்டும். இல்லையெனில் கொரோனா வைரஸ் பரவலை விடவும் கொடிய ஒன்று எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புள்ளது,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்