820 அடி உயரம், 8 மணி நேரம்... 'செங்குத்தான' பாறையில் சிக்கிக்கொண்டு.... உயிருக்கு 'போராடிய' வீரர்!
முகப்பு > செய்திகள் > உலகம்820 அடியுயரத்தில் பாராசூட்டில் சிக்கிக்கொண்ட வீரர் தாய்லாந்து நாட்டில், பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளார்.
ஆஸ்திரியாவை சேர்ந்த ஸ்கை டைவிங் குழுவொன்று சிறுவர்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றிற்காக, தாய்லாந்து நாட்டுக்கு வந்துள்ளது. இந்த குழுவில் இருந்த ஜோஹன்ஸ் கிராசர் என்ற வீரர் தன்னுடைய காதலியுடன் பட்டாலுங் மாகாணத்தில் உள்ள Khao Ok Talu என்ற மலைக்குச் சென்றுள்ளார்.
அந்த மலையில் இருந்து பாராசூட்டில் குதித்தபோது காற்றின் வேகம் காரணமாக ஜோஹன்ஸ் அங்கிருந்த செங்குத்தான பாறையொன்றில் சிக்கிக் கொண்டார். தரையில் இருந்து சுமார் 820 அடியுயரத்தில் சிக்கிக்கொண்ட ஜோஹன்ஸ் உதவிக்காக கத்தி, கூச்சல் போட்டுள்ளார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப்படையினருக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையில் அவரது காதலி பாறைக்கு அருகில் இருந்த மற்றொரு மலைப்பகுதியில் கயிற்றின் உதவியுடன் இறங்கி, ஜோஹன்ஸூக்கு தைரியம் அளித்தார். பாறையில் மோதியதால் ஜோஹன்ஸின் வலதுகாலில் இருந்து ரத்தம் வேகமாக வெளியேற ஆரம்பித்தது.
காற்று அதிகமாக வீசியதால் ஹெலிகாப்டர் கொண்டு அவரை மீட்கும் பணி தோல்வி அடைந்தது. இதையடுத்து கயிறு மூலமாக அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இதன் வழியாக ஜோஹன்ஸின் 8 மணி நேரப்போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அவர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.