இந்த மிரட்டலுக்கு நாங்க பயப்பட மாட்டோம்...' நாம இப்படி அனுபவிக்குறதுக்கு காரணமே...' 'சீனாவோட அலட்சியம் தான்...' டிராகனுடன் மோதும் கங்காரு...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் அலட்சியத்தாலேயே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, பல உயிர்கள் பிரிந்துள்ளதாகவும் சீனாவின் மீது சர்வதேச விசாரணை தேவை என மீண்டும் போர் கொடியை தூக்கியுள்ளது ஆஸ்திரேலிய அரசு.
சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகெங்கிலும் இதுவரை 7 மில்லியனுக்கு மேற்பட்டோரை பாதித்துள்ளது. இதனால் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சில நாட்கள் சீன அரசு மற்ற உலகநாடுகளுக்கு தெரியப்படுத்தாமலும், மக்களை கட்டுப்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததும் தான் தற்போது உலகம் முழுவதும் அனுபவிக்கும் இந்நிலைக்கு தொடக்க புள்ளியாக கருதப்படுகிறது.
இதனை வெளிப்படையாகவே கொரோனா வைரஸை சீனா வைரஸ் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். பல உலக நாடுகளும் சீனாவை இந்த விஷயத்தில் எதிர்த்தே வந்தன. மேலும் சீனாவின் உஹான் மாகாணத்தில் இருக்கும் நுண்கிருமிகள் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக தகவல்களும் வெளிவந்தன.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அரசு, "கொரோனா வைரஸ் பரவிய தொடக்கத்தில் சீனா அலட்சியமாகச் செயல்பட்டதன் விளைவைத் தான், இன்று உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உலக அளவில் பல பில்லியன்கணக்கான மக்களுக்கு நோய் பரவியதற்கு சீனா தான் காரணம். இது தொடர்பாக, சர்வதேச விசாரணை அவசியம் தேவை' என காட்டமாக கூறியுள்ளது.
இதன் காரணமாக சீனாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் வர்த்தக போர் துவங்கியுள்ளது என கூறலாம். இதற்கு முன்பே தென் சீனக் கடலில் வியட்நாம், பிலிப்பைன்சுக்கு சொந்தமான தீவுகளைச் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த முயற்சிக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இந்த பிரச்சனையும் இரு நாடுகளுக்கும் பனிப்போரை துவக்கியுள்ளது.
ஆஸ்திரேலியா சீன அரசு மீது சர்வதேச விசாரணை வேண்டும் என தெரிவித்த உடன், சீனா தன் நாட்டு மக்களிடம் ஆஸ்திரேலியா பற்றிய பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 'ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்று கொண்டிருக்கும் சீன மாணவர்கள் மீது அங்குள்ளவர்கள் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக இனவெறி தாக்குதல் நடக்கக்கூடும் என்று அறிவித்துள்ளது. மேலும் இனி அங்குச் செல்ல நினைக்கும் கல்வி பயிலும் மாணவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சீன சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வத்தையும் தவிர்க்க வேண்டும்" என்று சீனா தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து கல்வி பயில வரும் மாணவர்கள் மூலம் சுமார் 26 பில்லியன் டாலர் வருவாய் சம்பாதித்து வருவதும் சீனா இவ்வாறு கூற காரணமாகியுள்ளது.
சீனாவின் இந்த அறிவிப்பை கடுமையாக கண்டித்த ஆஸ்திரேலியா பிரதமர், ஸ்காட் மோரிசன் செய்தியாளர்களிடம், சீனாவின் இந்த தேவை இல்லாத மிரட்டல் மற்றும் வற்புறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். மேலும் இந்த விவகாரத்தில் எங்கள் நாட்டின் மதிப்பையும் நாங்கள் விற்கத் தயாராக இல்லை'' என்று கடுமையாக சாடியுள்ளார்.
மற்ற செய்திகள்