அமெரிக்காவில் '10ல் ஒருவர்' வேலையிழப்பு... '1.68 கோடி' பேர் சிறப்பு சலுகைக்கு 'விண்ணப்பம்'... இவை அனைத்தும் '3 வாரத்தில்' நடந்த 'மாற்றம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் 1.6 கோடிப் பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ளது. அமெரிக்காவில் மட்டும் இதுவரையில் 18,761 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வர்த்தக தலைநகரான நியூயார்க் நகரத்தில் மட்டும் மொத்தம் 7,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் வேலையிழந்துள்ளவர்கள் வேலையின்மைக்கான சிறப்புச் சலுகைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி, 66 லட்சம் பேர் கடந்த வாரத்தில் விண்ணப்பித்திருக்கின்றனர். அதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் மொத்தம் 1 கோடிப் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதாவது வேலையில் இருக்கும் பத்தில் ஒரு அமெரிக்கர் என்ற அளவில் கொரோனாவால் தங்களது வேலையை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 1.68 கோடி அமெரிக்கர்கள் கொரோனாவால் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்துக்கான அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் 15 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அமெரிக்க அரசு பொதுமக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் 2.3 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதாரச் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது விரைவில் சீராகிவிடும் என்று டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும், இந்த ஆண்டில் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளன.