'150 கோடி மக்கள் இருக்கும் நாட்டில்... வெறும் 3,318 உயிரிழப்புகள் தானா!?'... 'உண்மையை மறைக்கிறதா சீனா?'... கேள்விகளால் துளைத்தெடுக்கிறது அமெரிக்கா!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் குறித்து சீனா வழங்கிய புள்ளிவிவரங்கள் எதிலும் நம்பகத்தன்மை இல்லை, அதில் எதுவுமே துல்லியமாக இல்லை என்று இந்திய வம்சாவழி அமெரிக்க அரசியல் தலைவரும், குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே சந்தேகித்துள்ளார்.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ ஏற்கனவே சீனா அளித்த புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மையானது இல்லை, அதை வெள்ளை மாளிகை நிர்வாகிகள் நம்பவேண்டாம் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது குடியரசுக்கட்சியின் முன்னாள் எம்.பி. நிக்கி ஹாலேவும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிருபர்களிடம் பேசுகையில் கூட, “கொரோனா வைரஸ் தொடர்பாக சீனா வழங்கிய புள்ளிவிவரங்களை நான் நம்பவில்லை. அந்த எண்ணிக்கையில் எனக்கு சிறிய சந்தேகம் இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் சீனாவை தாக்கியதில் 81,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 76,408 பேர் குணமடைந்துள்ளனர். 3,318 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உயிரிழப்பும், பாதிப்பும் கடுமையாக இருக்கும். சீன அரசு உலகிற்கு பொய்யான தரவுகளை தருவதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரி்க்க தூதர் நிக்கி ஹாலே நேற்று நிருபர்களிடம் கூறுகையில் "சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 3,300 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 150 கோடி மக்கள் உள்ள நாட்டில் இதுதான் புள்ளிவிவரங்களா? இது உண்மையில் நம்பும் வகையில் இல்லை, துல்லியத்தன்மையும் இல்லை.
சீனாவோடு ஒப்பிடும் போது அமெரிக்காவில் இதுவரை 2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 5,800 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
சீனாவில்தான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனா எப்போதுமே சர்வதேச அளவில் தனது மதிப்பையும், கௌரவத்தையும் குறைத்துக்கொள்ள விரும்பாத நாடு. உலகில் மற்ற நாடுகள் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு உதவி செய்வதைவிட சீனா தனது கௌவுரவத்தின் மீதுதான் அதிகமான அக்கறை செலுத்தும்.
அமெரிக்காவின் சிஐஏ சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்து சுயமாக மதிப்பீடு செய்து வருகிறது. அதுவரை சீன அரசு அளிக்கும் எந்த புள்ளிவிவரங்களையும் வெள்ளை மாளிகை நம்ப வேண்டாம்.
உலகளவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. அதன் பரவும் வேகம், செயல்திறன், பாதிப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும்நிலையில் சீனாவில் இருந்து உண்மையான பாதிப்பு விவரங்கள், இறப்பு விவரங்கள் வந்தால்தான் உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறுகையில், "கொரோனா வைரஸில் சீனா உலகிற்கு அளித்த புள்ளிவிவரங்கள் ஏதும் நம்பும் வகையில் இல்லை. ஆனால், துரதிர்ஷ்டமாக அந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் உண்மையானதா என்று உறுதி செய்ய முடியாமல் இருக்கிறோம். ஆனால், சீனா அளித்த விவரங்கள் ஏதும் நம்பமுடியாது. சீனாவின் சமூக ஊடகங்களில் இருந்து எங்களுக்கு வரும் செய்திகள் மாறாக இருக்கின்றன" எனத் தெரிவித்திருந்தார்.