சீனாவின் எதிர்ப்பை மீறி.. தைவானில் கால் பதித்த அமெரிக்க சபாநாயகர்.. எல்லையில் பறந்த சீன போர் விமானங்கள்.. உலகமே கவனித்த பரபரப்பு பயணம்..
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலக போருக்கு பிறகு, சீனாவில் இருந்து தைவான் பிரிந்து, தனி நாடாக தற்போது சொந்த அரசியலமைப்பு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆகியவற்றுடன், ஒரு சுதந்திர நாடாக இருந்து வருகிறது.
ஆனால், அதே வேளையில், சீனாவோ தனது கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பகுதி என தைவானை சொல்லி கொண்டிருக்கிறது.
அது மட்டுமில்லாமல், தைவானை தங்கள் நாட்டுடன் இணைக்கவும் சீன அதிபர் ஜின்பிங் விருப்பத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழலில், தைவானுக்கு அமெரிக்காவின் ஜோ பிடன் அரசு ஆதரவை அளித்து வருகிறது. தைவானை அடைய சீனா முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் எடுத்த முடிவு, அங்கு இன்னும் பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தன்னுடைய ஆசிய நாடுகள் பயணத்தில் தைவானை சேர்த்துக் கொண்டதும், சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி அமெரிக்காவை எச்சரிக்கவும் செய்திருந்தது. ஆனால், சீனாவின் எதிர்ப்பையும் மீறி, நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார். மிகுந்த பாதுகாப்புகளுக்கு மத்தியில், அவர் தைவான் வந்து இறங்கிய சமயத்தில், சீனாவின் போர் விமானங்கள் தைவான் எல்லை பகுதியில் வலம் வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முதலில் இதனை மறுத்த சீனா, பின் அந்த விஷயத்தை ஒப்புக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனது தைவான் பயணம் குறித்து கருத்து தெரிவித்த நான்சி பெலோசி, தைவானின் துடிப்பான ஜனநாயகத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது என்றும், அவர்களுக்கான ஆதரவு வெளிப்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தைவான் நாடாளுமன்றத்திலும் அவர் சென்றிருந்தார். இது ஒரு புறம் இருக்க, நான்சி பெலோசியின் தைவான் பயணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க தூதருக்கு சீனா சம்மன் அனுப்பி உள்ளது.
தைவான் நாட்டின் பெயரில், சீனா மற்றும் அமெரிக்க அரசு மோதி வரும் சம்பவம், உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
இதனிடையே, தங்களின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் வந்தடைந்ததால், தங்களின் கொள்கையை மீறிய செயலினை விமர்சித்த சீனா, தற்போது தைவான் மீது சில வர்த்தக தடைகளையும் விதித்துள்ளது. அதேபோல, தைவானை சுற்றி, சீனாவின் போர் விமானங்கள் பறப்பதும், அவர்களின் போர்க் கப்பல்கள் தயார் நிலையில் இருப்பதுமாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சீனாவின் ராணுவமும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அடுத்து சீனாவின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்பது, உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.
மற்ற செய்திகள்