'தன்னைப் போலவே உள்ள'.. 8 பெண்களை தேர்வு எழுதவைத்த ஆளுங்கட்சி எம்.பி..'கிடுகிடுக்க வைத்த ஆள்மாறாட்டம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்குகள் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், வங்கதேசத்தில் நாடாளுமன்ற எம்.பி ஒருவருக்காக பல்கலைக் கழகத் தேர்வில் நிகழ்ந்துள்ள ஆள்மாறாட்ட மோசடி அதிர வைத்துள்ளது.
வங்கதேச ஆளும் கட்சியான, அவாமி லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் தமன்னா நஸ்ரத். நரசிங்கிடி மாவட்டத்தின் மேயராக இருந்து, 2011-ம் ஆண்டு ஒரு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட லோக்மான் உசேனின் மனைவியான இவருக்கு பதிலாக வங்கதேச திறந்த நிலை பல்கலைக்கழகத்தில், பி.ஏ இளநிலை படிப்புத் தேர்வில் வேறு ஒரு பெண் தேர்வு எழுதியுள்ள சம்பவம் கிடுகிடுக்க வைத்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர், இதுவரை 4 பருவங்களாக நடந்த 13 தேர்வுகளில் ஒன்றைக் கூட எழுதாத, தமன்னா நஸ்ரத் ஆள்மாறாட்ட மோசடி செய்து, வேறு ஒரு பெண்ணை வைத்து தேர்வு எழுதியதால், அவரது பல்கலைக் கழகப் பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும், இனி அவர் படிப்பைத் தொடர முடியாது என்றும், இந்த விவகாரத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் சட்ட ரீதியாக விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார்.
எனினும் எம்.பிக்காக தேர்வு எழுதும் பெண்ணுக்கு எம்.பியின் ஆட்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள் என்றும், என்னதான் வெளிப்படையாக இதுபோன்ற மோசடிகள் நடந்தாலும் யாரும் எதிர்க்க முன்வருவதில்லை என்றும் பல்கலைக் கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோ ஒன்றின் மூலம் , தமன்னாவின் மோசடி ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளதோடு, இதுவரை அவருக்காக அவரைப் போலவே இருக்குற 8 பேர் பருவத் தேர்வுகளை எழுதியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.