ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்பதை, சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் மற்றும் அலிபாபா இணை நிறுவனர் ஜாக் மா ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
'1970 முதல் 2000-ம் ஆண்டு வரை சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 10 சதவீதத்திற்கு அதிகமாகவே இருந்த வந்தது. அது தற்போது குறைந்து 6 சதவீதமாக உள்ளது. எனவே சீனாவின் தொழில்துறையில் இயல்பாகக் கணப்படும் 996 என்ற செயல் முறையைக் கடைபிடிக்கும்போது மீண்டும் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லலாம்' என்று அலிபாபா இணை நிறுவனர் ஜாக் மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
996 என்றால் காலை 9 முதல் மாலை 9 மணிவரை என வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். அதாவது ஒருநாளைக்கு 12 மணிநேர வேலை, வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்பதே 996 ஆகும். ஜாக் மாவின் இந்தக் கருத்துக்கு சீனாவில் உள்ள தொழிலாளர்கள் சங்கங்களிலிருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் 'யாரெல்லாம் தங்கள் வேலையை விரும்பிச் செய்கிறார்களோ, அவர்கள் 966-ஐ ஆதரிப்பார்கள்' என்று அலிபாபா நிறுவனர் ஜாக் மா மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். முதலில் கூறிய கருத்துக்கு ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது நாங்கள் என்ன வேலை செய்யப் பிடிக்காமல், கடமைக்காகவா வேலை செய்து வருகிறோம் என்றும் தொழிலாளர்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.