'ஹீரோ லுக், லண்டனில் படிப்பு'... 'பஞ்ஷிர் பள்ளத்தாக்குக்கு வந்து பாருங்கடா'...'தாலிபான்களையே அலறவிட்ட தைரியம்'... யார் இந்த 32 வயது இளைஞர்?
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்களுக்குப் பயந்து மக்கள் ஓடி கொண்டிருக்கும் நிலையில் 32 வயது இளைஞர் ஒருவர் தைரியத்துடன் அவர்களை எதிர்த்து நிற்கிறார்.
தலைநகர் காபூல் நகரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தாலிபான் அமைப்பினர் கொண்டு வந்துள்ளனர். ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேவேளையில், வட மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கு இன்னும் தாலிபான்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது.
தாலிபான்கள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் இன்னும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கை மட்டும் கைப்பற்ற முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், பஞ்ஷிர் மாகாணத்தின் புகழ்பெற்ற தளபதியின் மகன் தாலிபான்களுக்கு எதிராகத் துணிந்து போராடி வருவது தான்.
இந்த பள்ளத்தாக்கைக் கடந்த ஆட்சியின்போது கூட தாலிபான்களைக் கைப்பற்ற முடியவில்லை. அதற்கு முன்பு படையெடுத்த சோவியத் படைகளாலும் இந்த பள்ளத்தாக்கை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானிலிருந்து 1989ல் சோவியத் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் தாலிபான்கள் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
எனினும் பஞ்ஷிர் மட்டுமல்லாது வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை அஹ்மத் ஷா மற்றும் அவரது நேசப் படைகள் கைப்பற்றின. அஹ்மத் ஷாவும் இஸ்லாமிய அடிப்படை வாதியாக இருந்த போதிலும் பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும், ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார்.
தற்போது தற்போது அஹ்மத் ஷாவின் பாதையில் அவரது மகன் அஹமத் மசூத் தைரியமாகத் தாலிபான்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். தாலிபான்களுக்கு எதிராகப் படைகளைத் திரட்டி அவர்கள் பயிற்சிபெறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. மேலும், தங்களுக்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளை வழங்குமாறு அமெரிக்காவும் அஹமத் மசூத் கோரிக்கை வைத்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ராணுவ கல்லுரியில் பயின்ற அஹமத் மசூத், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். இதற்கிடையே 4 மணி நேரத்தில் சரணடைய வேண்டும் என்று பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உள்ளவர்களுக்குத் தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைசி வீரரின் உயிர் உள்ளவரை பஞ்ஷிர் பள்ளத்தாக்குக்காகப் போராடுவோம் என அஹமத் மசூத் கூறியுள்ளதால் அங்குப் பதற்றம் நிலவி வருகிறது.
மற்ற செய்திகள்