மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு... குடும்பத்தோடு தப்பி ஓடிய ஆப்கான் மத்திய வங்கி கவர்னர்!.. வரலாற்று சரிவில் 'ஆப்கானி' நாணயம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றப்போவதை முன்கூட்டியே அறிந்து, ஆப்கான் மத்திய வங்கி கவர்னர் தனது குடும்பத்தோடு நாட்டை விட்டு தப்பி ஓடிய திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது.

மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு... குடும்பத்தோடு தப்பி ஓடிய ஆப்கான் மத்திய வங்கி கவர்னர்!.. வரலாற்று சரிவில் 'ஆப்கானி' நாணயம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கா தனது ராணுவத்தை முழுமையாகப் பின்வாங்கிய நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கைப்பற்றி மொத்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்க முடியாது என ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, எவ்விதமான முன் அறிவிப்புமின்றி 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டர் முழுவதும் பணத்துடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதேபோல் வேறு வழி தெரியாத ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கியின் கவர்னர் அஜ்மல் அகமதி பெரும் போராட்டத்திற்குப் பின் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளார்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டின் நாணயமான ஆப்கானி மதிப்பு, செவ்வாய்க்கிழமை மட்டும் 1.7 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான ஆப்கானி மதிப்பு 83.5013 ஆகச் சரிந்துள்ளது. ஆப்கானி நாணயத்தின் மதிப்பு கடந்த 4 நாட்களாக சரிந்து வருகிறது. 

முன்னதாக, 'டா ஆப்கானிஸ்தான்' வங்கி வெளியிட்ட அறிவிப்பில் இனி மத்திய வங்கி எவ்விதமான டாலர் பரிமாற்றத்தையும் செய்யாது என அறிவித்துள்ளது. அதிகளவிலான டாலர் விநியோகம் மூலம் தேவையில்லாத பதற்றம் சந்தையில் ஏற்படும் என அறிவித்தது. 

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சி முழுமையாகக் கவிழ்ந்து மொத்த நாடும் தாலிபான் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியின் தலைவரான அஜ்மல் அகமதி வேறு வழியின்றி ராணுவ விமானத்தில் வெளியேறியுள்ளதாகத் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

கடந்த ஒருவாரத்தில் ஏற்பட்ட டாலர் வெளியேற்றத்தின் மூலம் ஆப்கானி நாணயத்தின் மதிப்பு டாலருக்கு எதிராகத் தனது நிலையான 81ல் இருந்து 100 வரையில் சரிந்து தற்போது 86 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் வங்கி மற்றும் நாணய பரிமாற்ற அமைப்புகளை டாலர் பரிமாற்றம் செய்யத் தடை விதித்தது டா ஆப்கானிஸ்தான் வங்கி. 

டா ஆப்கானிஸ்தான் வங்கியின் கவர்னர் அஜ்மல் அகமதி தான் நாட்டை விட்டு வெளியேறியது பற்றி டிவிட்டரில் சுமார் 18 ட்வீட்களைப் பதிவிட்டுள்ளார். அதில், "சனிக்கிழமை எனது குடும்பம் என்னை அழைத்து, அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் குடும்பமும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் எனக் கூறினர். 

மேலும், பாதுகாப்புத் துறையிடம் விசாரித்த போது தாலிபான்கள் அடுத்த 36 மணிநேரத்தில் காபூலை கைப்பற்றவும், அடுத்த 56 மணிநேரத்தில் மொத்த நாடும் தாலிபான் கையில் செல்லும் எனக் கூறினார்கள்" என அஜ்மல் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்துள்ள அவர், "திங்கட்கிழமை நாட்டை விட்டு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். ஆனால், ஞாயிற்றுக்கிழமை கிடைக்கும் தகவல்கள் மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் துணை அதிகாரிகளைப் பொறுப்பில் விட்டுவிட்டு விமான நிலையம் வந்தேன், துணை அதிகாரிகளை விட்டு வந்தது வருத்தம் அளித்தது. 

கடைசி நேரத்தில் போராடி கூட்டத்தோடு கூட்டமாக ராணுவ விமானத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பினேன்" எனப் பதிவிட்டுள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறிய பின்பு பாகிஸ்தான் நாட்டின் சவ்ரின் டாலர் பத்திரம் 2031 மதிப்பு 1.8 சென்ட் குறைந்தது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஆசியாவிலேயே மிகவும் மோசமான சரிவைப் பதிவு செய்தது இதுதான். இன்று 0.4 சென்ட் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ஆப்கான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் புதிய அரசை அமைக்கும் பணியில் இருந்தாலும் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், புதிதாக ஆட்சி அமைக்கப்போகும் அரசின் கையில் தான் அனைத்தும் உள்ளது. 

இந்நிலையில் ஆப்கானி நாணயத்தின் மதிப்பு புதிய அரசின் பொருளாதார வழிகாட்டல், நாணயக் கொள்கை, நிதிநிலை கொள்கை ஆகியவற்றை மையப்படுத்தியே அமையும். இதேபோல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மத்தியில் நட்புறவு ஏற்பட்டால் இரு நாடுகளுக்கும் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாகவும் பல நன்மைகள் உள்ளது. 

மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அதிகப்படியாகப் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு முதல் மக்கள் நலன், பொருளாதாரம், நாணய மதிப்பு என அனைத்தையும் பாதிக்கும். 

அதே வேளையில் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தாலிபான்களும் சிறப்பான ஆட்சியையும், அரசையும் நிறுவ வேண்டும் என்பதில் தீவரமாக உள்ளனர். இதற்காக அமெரிக்காவுடன் சில முக்கியமான ஒப்பந்தங்களையும் செய்துள்ளது தாலிபான் அமைப்பு. 

தாலிபான்கள் அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தாலிபான் அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் எந்த விதமான மோதலிலும் ஈடுபடக் கூடாது. நட்பு நாடுகளைத் தாக்கக் கூடாது, அதேபோல் தீவிரவாத இயக்கங்கள் எதற்கும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இடம் கொடுக்கக் கூடாது என ஒப்பந்தம் செய்துள்ளது.

 

 

 

 

மற்ற செய்திகள்