ஷாப்பிங் மாலுக்கு நடுவே இருந்த ரகசிய அறை.. யாருக்கும் தெரியாம வருஷ கணக்கில் தங்கியிருந்த நபர்.. அவங்க போட்ட பிளான் இருக்கே..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் பரபரப்பான ஷாப்பிங் மாலுக்கு கீழே உள்ள ரகசிய அறையில் வருடக்கணக்கில் தங்கியிருந்திருக்கிறார் ஒருவர். எதேச்சையாக அதிகாரிகள் அந்த அறையை கண்டுபிடிக்கவே, அதன்பிறகே அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் ரோடி ஐஸ்லேண்டை சேர்ந்தவர் மைக்கேல் டவுன்சென்ட். ஓவியரான இவர் வசித்துவந்த வீட்டின் உரிமையாளர் ஒருநாள் இவருக்கு அதிர்ச்சியளித்திருக்கிறார். வீட்டை புதுப்பிக்க இருப்பதாகவும் அதனால் வீட்டை காலி செய்யுமாறும் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மைக்கேல், வீடு தேடி அலைந்திருக்கிறார். ஆனால் வீடு கிடைத்தபாடில்லை. அப்போதுதான் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் அவர் பார்த்த காட்சி நினைவுக்கு வந்திருக்கிறது.
அதாவது 1999 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் புதிதாய் ஷாப்பிங் சென்டர் ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது அந்த கட்டிடத்திற்கு கீழே, ரகசிய அறை இருப்பதை பார்த்திருக்கிறார் மைக்கேல். தினசரி வாக்கிங் செல்லும்போது எதேச்சையாக அவர் அந்த இடத்தை முதன்முதலில் பார்த்துள்ளார். அதன்பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து வீடு தேடி அலையும்போது அவருக்கு அந்த இடம் ஞாபகத்திற்கு வந்திருக்கிறது.
இதனையடுத்து அந்த இடத்துக்கு மீண்டும் சென்று நோட்டம்விட்டுள்ளார் மைக்கேல். அந்த அறையில் சோஃபா, பிளேயிங் ஸ்டேஷன் ஆகியவை இருப்பதை அறிந்த மைக்கேல், தனது நண்பர்கள் சிலரிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். அப்போதுதான் அதற்குள் சென்று வசிக்க இந்தக் குழு முடிவெடுத்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் உள்ளே சென்று வாழ்க்கையை துவங்கிய மைக்கேல் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளே ஒரு சுவரையும் எழுப்பியிருக்கின்றனர்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புலப்படாமல் இருக்க சுவரை இவர்கள் எழுப்ப, சத்தம் வெளியே கேட்காமல் இருக்கவும் அது உதவியிருக்கிறது. அந்த ரகசிய அறையில் கழிப்பறை இல்லாததால், பொது கழிப்பிடங்களை மட்டுமே இந்த குழு பயன்படுத்தி வந்திருக்கிறது. முக்கியமாக பகல்பொழுதுகளில் வெளியே கழிக்கும் இந்த குழு இரவு நேரத்தில் மட்டும் தங்களது ரகசிய வீட்டுக்கு திரும்புவார்களாம். ஆனால், பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று பழமொழியும் இருக்கிறதல்லவா? அப்படி பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் இந்த அறையை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
உள்ளே மைக்கேல் தனது நண்பர்களுடன் வசித்துவந்ததை அறிந்து அனைவரும் திகைத்துப்போய்விட்டனர். உடனடியாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்ற விசாரணையின்போது, அவருக்கு அங்கிருந்து வெளியேற அவகாசம் அளிக்கப்பட்டாலும், மீண்டும் மாலுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில், மைக்கேல் மால் இருக்கும் பகுதிக்கு அருகே வசித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்