"அது இல்லைன்னா விமானத்தில் பயணிக்க முடியாது..." "போயி வாங்கிட்டு வாங்க..." அதிகாரிகள் கெடுபிடி... இத்தாலியில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததையடுத்து, அங்கிருந்து வெளியேற நினைக்கும் தமிழக மாணவர்களிடம் விமானத்தில் பயணிக்க மருத்துவச் சான்றிதழ் வாங்கி வருமாறு விமான ஊழியர்கள் கூறுவதால் நூற்றுக்கணக்கானோர் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.
இத்தாலியில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர். இதுவரை அங்கு 463 பேரும் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வைரஸ் பாதிப்பை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் பல்வேறு நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கிருக்கும் வெளிநாட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 55 மாணவர்கள் இத்தாலி விமான நிலையத்தில் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மிலன் மல்பென்சா விமான நிலையத்தில் தற்போது காத்துக் கிடக்கின்றனர்.
விமானத்தில் பயணிக்க மருத்துவச் சான்றிதழ் வாங்கி வருமாறு விமான ஊழியர்கள் அவர்களிடம் கேட்பதால் அவர்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். ஆங்கிலம் தெரியாத இத்தாலியர்களிடம் மருத்துவச் சான்றிதழ் எப்படி வாங்குவது என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். முறையாக சான்றிதழ் பெறுவது பற்றி எங்களுக்கு எந்தவித வழிகாட்டுதலும் இல்லை எனக் குறிப்பிடும் மாணவர்கள், இதனால் ஏற்பட்ட தாமதத்தால் விமானத்தை நாங்கள் தவறவிட்டு விட்டோம் என வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.