'அம்மாவ விட பெரிய சக்தி என்ன இருக்கு'... 'திடீரென சுருண்டு விழுந்த பெண்'... 'தாயை காப்பாற்ற 5 வயசு சிறுவன் செஞ்ச செயல்'... அசந்து போன போலீசார்!
முகப்பு > செய்திகள் > உலகம்சூப்பர் ஹீரோவாக இருக்க வயது தேவையில்லை, தனது தாய்க்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் நானே சூப்பர் ஹீரோவாக மாறிவிடுவேன் என நிரூபித்துள்ளார் 5 வயது சிறுவன் ஒருவன்.
இங்கிலாந்தின் வெஸ்ட் மெர்சியா பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து, அந்த மாகாண காவல்துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஜோஷ் என்ற அந்த 5 வயது சிறுவனின் தாயார் திடீரென வீட்டில் மயங்கி விழுகிறார். அப்போது வீட்டில் ஜோஷும் அவரது சகோதரரும் மட்டும் இருந்துள்ளார்கள். அம்மாவிற்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் சிறுவர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், சிறுவன் ஜோஷ் சமயோசிதமாகச் செயல்பட்டு ஐரோப்பாவில் அவசரக்கால சேவைகளுக்கான தொடர்பு எண்ணான 112-க்கு போன் செய்துள்ளார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் சிறுவன் ஜோஸின் தாயை மீட்டு மருத்துவச் சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தனது தாய் மயங்கி விழுந்த நிலையில் என்ன செய்வது எனத் தெரியாமல் ஜோஷ் தவித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஜோஷ் தான் விளையாடும் பொம்மை ஆம்புலன்சில் குறிப்பிடப்பட்டிருந்த அவசர எண்ணைக் கவனித்த பின்னரே அந்த எண்ணுக்கு டயல் செய்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினார்கள்.
இதனிடையே சிறுவன் ஜோஸின் செயலை வியந்து பாராட்டிய டெல்ஃபோர்டு உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜிம் பேக்கர், ''இது மிகவும் ஆச்சரியமான நிகழ்வு. ஜோஷ் பதற்றமடையாமல் மிகவும் தைரியமாகச் செயல்பட்டு, தனது தாயை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே அவனது மனதில் இருந்துள்ளது. இந்த வயதில் இவ்வளவு மனத்தைரியம் உண்மையில் அசாதாரணமானது. எதிர்காலத்தில் ஜோஷ் ஒரு சிறந்த போலீஸ் அதிகாரியாக வருவார் என எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறினார்.
இதற்கிடையே தனது தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், பதற்றப்படாமல் செயல்பட்ட சிறுவன் ஜோஸை சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்