'நாலாபுறமும் சிதறி ஓடிய மக்கள்'... 'விரட்டி விரட்டி குத்திய இளைஞர்'... கொடூரனாக மாறிய இளைஞரின் அதிர்ச்சி பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஓய்வுக்காகப் பூங்காவில் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்த மக்களை, இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி, கத்தியால் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த இளைஞர் குறித்த பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரில் உள்ள புகழ்பெற்ற பூங்கா போர்பரி. இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே காணப்படும். நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை, அந்த பூங்காவில் மக்கள் கூடியிருந்தார்கள். அப்போது இளைஞர் ஒருவர் திடீரென பூங்காவிற்குள் சத்தமிட்டவாறே நுழைந்தார். அங்கிருந்த மக்கள் என்னவென்று சுதாரிப்பதற்குள், தான் வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்களைக் கத்தியால் குத்த தொடங்கினார்.
பூங்காவிலிருந்த மக்கள் அதிர்ச்சியில் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள். ஆனால் அந்த வாலிபர் சற்றும் ஈவிரக்கமின்றி விரட்டிச் சென்று கத்தியால் குத்தினார். இதில் பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். உடனே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், அங்கு வந்து அந்த இளைஞரைச் சுற்றி வளைத்துப் பிடித்தார்கள். இந்த கொடூர சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கிடையே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ''அந்த இளைஞரின் பெயர் கைரி சதல்லா. இவர் 16 நாட்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார். விடுதலையாவதற்கு முன்பு கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வந்த அவர், உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்காகச் சிகிச்சை பெற்று உள்ளார். இவர் மீது ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு வன்முறை நிகழ்த்தியதாகக் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், இங்கிலாந்தில் 5 ஆண்டுகள் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த இளைஞருக்கு சிரியா செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்ததன் காரணமாக உளவு அமைப்பின் கண்காணிப்பில் இருந்துள்ளார். இதனிடையே வன்முறைக்கான குற்றச்சாட்டுகளும் உளவியல் பிரச்சினையும் உள்ள ஒரு இளைஞரை இங்கிலாந்து ஏன் மேலும் 5 ஆண்டுகள் தங்கிக் கொள்ள அனுமதித்தது என்ற கேள்வி, தற்போது எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்