"என்னமோ தப்பா நடக்குது".. கரை ஒதுங்கிய 200க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்.. நிபுணர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில் 200க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
பைலட் திமிங்கிலங்கள்
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியான டாஸ்மேனியாவில் 230 பைலட் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவற்றுள் பாதி உயிருடன் இருக்கலாம் என உள்ளூர் மீட்புப்படையினர் கணித்திருக்கின்றனர். மக்வாரி துறைமுகத்தின் நுழைவாயிலில் கரை ஒதுங்கியுள்ள இந்த திமிங்கிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இதே பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோன்று திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. தற்போது மீண்டும் 230 பைலட் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது உள்ளூர் மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதுகுறித்து விஷயம் அறிந்த மக்கள் கடற்கரைக்கு சென்றிருக்கின்றனர். உயிருடன் இருக்கும் திமிங்கிலங்கள் மீது தண்ணீரை வாரி இறைத்தும், அவற்றின்மீது போர்வைகளை போர்த்தியும் வருகின்றனர். மாநில இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் இதுகுறித்து பேசுகையில் "திமிங்கலங்கள் மக்வாரி துறைமுகத்திற்கு அருகே கரை ஒதுங்கியுள்ளன. அவற்றுள் பாதி உயிருடன் இருப்பதாகத் தெரிகிறது." என்றனர்.
மீட்பு
கடல் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் ஊழியர்கள் திமிங்கல மீட்பு கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், உயிர் பிழைக்கக்கூடிய திமிங்கிலங்களை மீண்டும் கடலில் விடும் முயற்சிகளில் அவர்கள் இறங்குவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இறந்துபோன திமிங்கிலங்களை தேடி சுறாக்கள் படையெடுப்பதை தடுப்பது சவாலான காரியம் என்றும் அதிகாரிகள் பேசும்போது குறிப்பிட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே மக்வாரி துறைமுகத்திற்கு அருகே 500 பைலட் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. அவற்றுள் 300க்கும் மேற்பட்டவை உயிரிழந்தது. பொதுமக்களின் துணையுடன் மீட்புப்பணிகள் நடைபெற்றும் திமிங்கிலங்களை காப்பாற்ற முடியாமல் போனது. உணவை தேடி இந்த திமிங்கிலங்கள் கரைக்கு வந்திருக்கலாம் எனவும், இதுகுறித்து விசாரணை தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சுமார் 6 மீட்டர் வரையில் வளரக்கூடிய இந்த வகை திமிங்கிலங்கள் கணிசமான எண்ணிக்கையில் கரை ஒதுங்கும் நிகழ்வு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் நடந்திருப்பதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Also Read | யம்மாடி எவ்வளவு இருக்கு.. படையெடுத்த முதலைகள்.. உறையவைக்கும் வீடியோ.. அதிகாரிகள் கொடுத்த விளக்கம்..!
மற்ற செய்திகள்