இரவு நேர ‘கேளிக்கை விடுதியில்’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’.. பெண்கள் உட்பட ‘23 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்’..
முகப்பு > செய்திகள் > உலகம்மெக்சிகோவில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவின் தெற்கு பகுதியிலுள்ள கோட்ஸாகோல்காஸ் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு திடீரென அங்கு வந்த கும்பல் ஒன்று விடுதியின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் விடுதி தீப்பிடித்து எரிந்ததில் 8 பெண்கள் உட்பட 23 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே இந்த மாதத் தொடக்கத்தில் மெக்சிகோவின் உருவாபனில் நடந்த இதேபோன்ற ஒரு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மெக்சிகோவில் 2006 முதல் 2012 வரை போதைப் பொருள் கும்பல்களிடையே நடந்துவந்த போரை நினைவுபடுத்துவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள வெராக்ரூஸ் ஆளுநர் குய்ட்லாஹ்வாக் கார்சியா, “இது போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலாக இருக்கக் கூடும். தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும்” எனக் கூறியுள்ளார்.