அதிரடி செக்! இனி இந்த 13 நாடுகள் வழியா ரஷ்ய விமானம் பறக்க முடியாது - சூடு பிடிக்கும் உலக அரசியல் சதுரங்கம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்ய விமானங்கள் தங்களது வான் எல்லையில் பறப்பதற்கு 13 உலக நாடுகள் தடை விதித்துள்ளது.
உக்ரைன் நாடு மீது ரஷ்யா கடந்த 24ம் தேதி போர் தொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ படையில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷியா, போரை தொடங்கியது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்களை குறிவைத்து இந்த ஆக்ரோஷ தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன்- ரஷ்ய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது.
இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா ஆக்ரோஷ தாக்குதல் நடத்துவதால் மக்கள் மெட்ரோ ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் கீவ்வில் சண்டை நடந்து வருவதால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரஷ்யா ராணுவம் கைப்பற்றிய கார்கிவ் பகுதியை மீண்டும் உக்ரைன் படைகள் மீட்டுள்ளது. கார்கிவ் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, உக்ரைன் அதிபர் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ராணுவ நிதி உதவி, உணவு, மருந்துகள், டாங்கிகள் மற்றும் ஆயுதங்களை உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. ரஷ்யாவின் விடாப்பிடியான மோதல் போக்கை கண்டித்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில், தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து டென்மார்க் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டென்மார்க்கை தொடர்ந்து ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்து அயர்லாந்து மற்றும் பெல்ஜியம் அரசும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து இத்தாலி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே பால்டிக் நாடுகள், போலந்து, செக் குடியரசு, பல்கேரியா, ருமேனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு மேலே உள்ள வான்வெளியில் தனியார் ஜெட் விமானங்கள் உட்பட ரஷியாவிற்கு சொந்தமான விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இங்கிலாந்து வான்வெளியில் பறக்கவும் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்